சுடச்சுட

  

  போகி நாளில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருள்களை எரிக்க வேண்டாம்: ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்

  By DIN  |   Published on : 13th January 2019 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போகிப் பண்டிகை அன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருள்களைத் தீயிட்டு எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
   தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பழையன கழித்தல் என்பதை வழக்கமாகக் கொண்டு, கிழிந்த துணிகள், பழைய கோரை படுக்கை விரிப்புகள், தேவையற்ற கழிவுகளை தீயிட்டு எரிப்பது வழக்கம்.
   தற்போதைய காலகட்டத்தில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பொருள்களை தீயிட்டு, எரித்து வருகின்றனர்.
   இதனால் எழும் நச்சுப்புகையின் விளைவாக பொதுமக்களுக்கு சுவாச நோய்கள், கண் எரிச்சல், இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதுடன் நச்சுக் காற்றாலும், கரும் புகையாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இப்புகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, எதிர்பாராத வகையில் விபத்துகளும் நிகழ வாய்ப்புள்ளது.
   இவ்வாறு நோய்கள், பிரச்னைகள் ஏற்படுத்தக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பொருள்களை எரிக்க வேண்டாம். பொங்கலுக்கு முந்தைய நாள் ஒரு சிறந்த நாளாக அமைய அன்றைய நாளில் குப்பைகளை முறைப்படி அகற்றுவோம். பொங்கல் திருநாளைச் சிறப்பாகவும், புகை மற்றும் காற்று மாசு இல்லாமல் இன்றியும் கொண்டாடுவோம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai