திருவள்ளூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்

திருவள்ளூரில் தைப்பொங்கலை முன்னிட்டு புத்தாடைகள், பொங்கல் பொருள்கள், மாடுகளுக்கான அலங்காரப் பொருள்கள் வாங்குவதற்கு

திருவள்ளூரில் தைப்பொங்கலை முன்னிட்டு புத்தாடைகள், பொங்கல் பொருள்கள், மாடுகளுக்கான அலங்காரப் பொருள்கள் வாங்குவதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பஜார் பகுதியில் குவிந்து வருவதால் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.
 தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் என்றால் புத்தாடைகள், இனிப்பு பொங்கல், செங்கரும்பு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகியவைதான் முதலில் நினைவுக்கு வரும். இவ்விழா திங்கள்கிழமை போகி பண்டிகையாக தொடங்கி வியாழக்கிழமை வரை கொண்டாடப்பட உள்ளது.
 இதையொட்டி, பொங்கலுக்குத் தேவையான மஞ்சள் கிழங்கு, செங்கரும்பு, தேங்காய், பூ வகைகள், பழ வகைகள், மாடுகளுக்கான அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு குவிந்துள்ளன.
 இவற்றை வாங்குவதற்காக திருவள்ளூர், ஈக்காடு, நாசரேத், ஒதிக்காடு, ஈக்காடு கண்டிகை, மூலக்கரை, சித்தம்பாக்கம், எரையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பஜார் பகுதி, திருவள்ளூர்-திருத்தணி-திருப்பதி சாலையில் உள்ள கடைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
 அதேபோல், திருவள்ளூர் பஜார், வீரராகவ கோயில் ரதவீதி, காய்கறி சந்தை, ஜி.என். சாலை, ஆவடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளுக்கான பல்வேறு அலங்காரப் பொருள்கள் விற்பனைக்கு வந்துள்ளன. சேலம், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து கடை வைத்துள்ளனர்.
 இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த வியாபாரி சிவராஜ் கூறியது:
 மாடுகளுக்கு தேவையான மூக்கணாங் கயிறு, பிடிகயிறு அலங்காரப் பொருள்கள் உற்பத்தி செய்யும் இடங்களுக்கே சென்று வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். இவற்றில் முக்கியமாக கொம்பு குப்பி, கழுத்துச் சலங்கை, நெத்திச் சலங்கை ஆகியவை மட்டும் குஜராத் போன்ற இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. கழுத்துச் சலங்கை ரூ. 600, நெத்திச் சலங்கை ரூ. 150-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு வண்ணங்களில் அலங்கார கயிறுகள் ரூ. 50 முதல் ரூ. 200 வரை விற்கப்படுகின்றன.
 கடந்த ஆண்டு காளை மாடுகள் வைத்திருப்போர் அதிக அளவில் வாங்கிச் சென்றனர். ஆனால், தற்போது விவசாயம் செழிப்பாக இல்லாத நிலையில் மாடுகளுக்கான அலங்காரப் பொருள்கள் குறைந்த அளவிலேயே விற்பனையாகின்றன என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com