மாட்டுப் பொங்கல்: போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவள்ளூர் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் விழா அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் விழா அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் நகரில் வீடுகள் தோறும் பொதுமக்கள் பொங்கல் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர். பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்களில் பொங்கல் விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அப்போது, கிறிஸ்துவர்கள் பொங்கல் வைத்து விவசாயம் தழைக்கவும், தேவையான அளவு மழை பெய்யவும் பிரார்த்தனை செய்தனர். 
தொடர்ந்து மாட்டுப் பொங்கல் விழா பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. திருவள்ளூரை அடுத்த மெய்யூர், ஈக்காடு, ராஜாபாளையம், அதிகத்தூர், மேல்நல்லாத்தூர் பகுதிகளில் விவசாயிகள் அவர்களது மாடுகளை குளிப்பாட்டி அவற்றுக்கு பொங்கல் வழங்கினர்.
தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் மாட்டு வண்டிகளின் ஊர்வலம் நடைபெற்றது. 
அதே போல் கும்மிடிப்பூண்டியை அடுத்த கண்ணம்பாக்கம் பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சதீஷ் முன்னிலையில் பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்று அப்பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை நடத்தினர்.  நிகழ்வில் திரளானோர் பங்கேற்றனர். 
காக்களூரில்...
திருவள்ளூரை அடுத்த காக்களூர் அருகே கசுவா கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா அறக்கட்டளை சார்பில் பொங்கல் விழாவையொட்டி பெண்களுக்கு கோலப்போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் புலியூர், புலியூர் கண்டிகை, பாக்கம், சிவன்வாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 200-க்கும்  மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
அதேபோல், ஆண்களுக்கு கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் கசுவா சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்றன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. சேவாலயா நிறுவனர் முரளிதரன் தலைமை வகித்தார். 
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் நகர் மன்ற முன்னாள் தலைவர் கமாண்டோ பாஸ்கரன், போரா விளையாட்டு அகாதமி நிறுவனர் ராகுல் டோரா ஆகியோர் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். அறக்கட்டளை பொறுப்பாளர் அமர்த்சந்த் ஜெயின் நன்றி கூறினார்.
திருத்தணியில்..
பொங்கல் விழாவையொட்டி திருத்தணி பகுதிகளில் பெண்கள், இளைஞர்கள் இடையே கோலம்  உள்பட பல்வேறு போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
 திருத்தணி ஒன்றியம், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி, பெண்கள் இடையே கோலப்போட்டி, கயிறு இழுத்தல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் துரைசாமி பரிசுகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.
இதேபோல், திருத்தணியை அடுத்த பெரியகடம்பூர் புதிய காலனி பகுதியில் மாட்டு பொங்கல் விழாவையொட்டி, பெண்கள் இடையே கோலம், கயிறு இழுத்தல், சிறுவர்களுக்கு ஓட்டப்பந்தம், கோகோ, கபடி ஆகிய போட்டிகள் புதன்கிழமை நடத்தப்பட்டன.
 இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வழக்குரைஞர் பாலாஜி பரிசுகள் வழங்கினார். இதில், 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அதேபோல் திருத்தணி கலைஞர் நகரில் நடைபெற்ற பொங்கல் விழாவில், உரியடி, ஓட்டப்பந்தயம் உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com