கோவை திருட்டு சம்பவம்: 2 கிலோ தங்க நகைகளுடன் திருப்பதியில் தாய், மகன் கைது

கோயம்புத்தூரில் திருடப்பட்ட 2 கிலோ தங்க நகைகளை திருப்பதி போலீஸார் மீட்டனர். இதில் தொடர்புடைய தாய், மகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கோவை திருட்டு சம்பவம்: 2 கிலோ தங்க நகைகளுடன் திருப்பதியில் தாய், மகன் கைது


கோயம்புத்தூரில் திருடப்பட்ட 2 கிலோ தங்க நகைகளை திருப்பதி போலீஸார் மீட்டனர். இதில் தொடர்புடைய தாய், மகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து திருப்பதி போலீஸார் கூறியதாவது: திருப்பதியில் வியாழக்கிழமை காலை சந்தேகப்படும் வகையில் தாய், மகன் ஆகிய இருவர் நடமாடினர். இதைக் கண்ட போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்களிடமிருந்த பைகளைப் பறிமுதல் செய்து அதை சோதனையிட்டனர். அதில் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து விசாரித்தனர். 
விசாரணையில் சிக்கியவர்கள் திருவள்ளூரைச் சேர்ந்த ரசூலின் மனைவி ஷமா(46), மூத்த மகன் முகமது சலீம்(29), என்பது தெரிய வந்தது. ரசூலின் இளைய மகன் ஃபரோஸ் அலி(26) கடந்த 7-ஆம் தேதி கோயம்புத்தூரில் தங்கம், வைரம், வெள்ளி நகைகளை தன் நண்பர்களுடன் இணைந்து திருடியுள்ளார். அவற்றில் சில நகைகளை தன் தாயிடம் அளித்து பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறி விட்டு, மீதமுள்ள நகைகளுடன் தலைமறைவானார். திருவள்ளூரில் இருந்தால் சந்தேகம் வரும் என்று கருதிய ஷமா, அந்த நகைகளை எடுத்துக் கொண்டு தன் மூத்த மகன் முகமது சலீமை அழைத்துக் கொண்டு திருப்பதிக்கு வந்துள்ளார் . அப்போது அவர்கள் போலீஸாரிடம் சிக்கினர்.
இது தொடர்பாக திருப்பதி போலீஸார், கோயம்புத்தூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் திருப்பதிக்கு வந்தனர். அதைத் தொடர்ந்து கைதாகியுள்ள ஷமாவையும், முகமது சலீமையும் திருப்பதி நீதிமன்றத்தில் நகர போலீஸார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1,965 கிராம் தங்கம், 15 கிராம் வைரம், 248 கிராம் வெள்ளி நகைகளும் தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
கைதாகியுள்ள முகமது சலீம் மீதும், அவரது சகோதரரான ஃபரோஸ் அலி மீதும் செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்குகள் திருப்பதி போலீஸில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com