பழவேற்காடு ஏரி, கடற்கரையில் அலைமோதிய கூட்டம்

காணும் பொங்கல் பண்டிகையையொட்டி பழவேற்காடு ஏரி மற்றும் கடற்கரைப் பகுதியில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் வியாழக்கிழமை குவிந்தனர்.
பழவேற்காடு ஏரி, கடற்கரையில் அலைமோதிய கூட்டம்


காணும் பொங்கல் பண்டிகையையொட்டி பழவேற்காடு ஏரி மற்றும் கடற்கரைப் பகுதியில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் வியாழக்கிழமை குவிந்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் ஏரியும் கடலும் சூழ்ந்த அழகிய தீவு பகுதியாக விளங்கி வருகிறது பழவேற்காடு. பழைமை வாய்ந்த நகரான பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் 
அமைந்துள்ளன. 
இங்கு 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகிய சிற்பங்களுடன் அமைந்துள்ள டச்சு கல்லறைகள், முகம்மதியர் மசூதியில் அமைந்துள்ள சூரிய ஒளியில் இருந்து விழும் நிழல் கடிகாரம், 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புனித மகிமை மாதா ஆலயம், லைட்ஹவுஸ் குப்பத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் மற்றும் பறவைகள் சரணாலயம், கடலும் ஏரியும் இணையும் முகத்துவாரப் பகுதி உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. இந்தியாவில் இரண்டாவது பெரிய உவர்ப்பு நீர் ஏரியாக விளங்கும் பழவேற்காடு ஏரி 15 கி.மீ. பரப்பளவில் உள்ளது. 
சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்காட்டுக்கு ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். காணும் பொங்கலை யொட்டி மீஞ்சூர், பொன்னேரி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பெரியபாளையம், ஆரணி, கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, காரனோடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பழவேற்காடு வந்து அங்குள்ள பழைமை வாய்ந்த இடங்களைப் பார்த்து ரசித்தனர். 
அதன் பின்னர் லைட் ஹவுஸ் குப்பத்தில் உள்ள கடற்கரைப் பகுதிக்குச் சென்றனர். 
படகு சவாரி செய்யத் தடை....: பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்யவும், கடலில் குளிக்கவும் போலீஸார் தடை விதித்திருந்தனர். இதன் காரணமாக பழவேற்காடு ஏரியில் சுற்றுலாப் பயணிகளை, படகு ஓட்டுநர்கள் யாரும் ஏற்றிச் செல்லவில்லை. 
பொன்னேரியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்....: காணும் பொங்கலையொட்டி விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் சார்பில் பொன்னேரியில் இருந்து பழவேற்காட்டுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததையொட்டி, 70-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com