திருமழிசை துணைக் கோள் நகரப் பணிக்கு எதிர்ப்பு:  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரை அடுத்த திருமழிசை பகுதியில் துணைக் கோள் நகரம் அமைக்கும் பணிக்காக வந்த அதிகாரிகளை

திருவள்ளூரை அடுத்த திருமழிசை பகுதியில் துணைக் கோள் நகரம் அமைக்கும் பணிக்காக வந்த அதிகாரிகளை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
திருமழிசை பகுதியில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 1,500 ஏக்கர் நிலப்பரப்பில்  துணைக் கோள் நகரம் அமைக்க கடந்த 1996-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்காக விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த முயன்றபோது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக  இத்திட்டம் கிடப்பில் 
போடப்பட்டது.
இதையடுத்து, 2011-ஆம் ஆண்டு செப்டம்பர்-7ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில்அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110-விதிகளின் கீழ் சென்னை மாநகர விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ஏழை எளியோர் வசிக்க அடுக்கு மாடி குடியிருப்பு கட்டித் தரும் வகையில் திருமழிசையில் துணைக் கோள் நகரம் அமைக்கப்படும் என்றும், இதற்காக 311.05 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 2,166 கோடியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கப்படும் எனவும், இது செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம், உட்கோட்டை, வெள்ளவேடு கிராமங்களை உள்ளடக்கிய துணைக் கோள் நகரமாக அமையும் என்றும் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக 122 ஏக்கர் நிலம் அரசு தரப்பில் இருந்து கையகப்படுத்தப்பட்டது.  
மேலும் தேவையான 199 ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் இதற்குத் தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அவர்களது நிலத்தைக் கையகப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு வேலி அமைக்கும் பணிக்காக பூந்தமல்லி துணை வட்டாட்சியர்  கோவிந்தராஜ் தலைமையில், வருவாய் ஆய்வாளர் ஜெயஸ்ரீ , கிராம நிர்வாக அலுவலர் பிருந்தா தேவி உள்ளிட்ட வருவாய்த் துறையினர் வெள்ளிக்கிழமை திருமழிசை பகுதிக்கு வந்தனர்.
அப்போது அங்கு வந்த விவசாயிகள், ஏற்கெனவே கையகப்படுத்திய நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியும், அப்பகுதியில் வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் நிலத்தில் இறங்கி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன், ஆய்வாளர் முரளிதரன் உள்ளிட்ட போலீஸார் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
இதைத் தொடர்ந்து, வேலி அமைக்கும் பணி நிறுத்தப்படும் என வருவாய்த் துறையினர் உறுதி அளித்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டம் காரணமாக திருமழிசை பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com