தொழிலாளர்கள் பணிநீக்கம்: பேச்சுவார்த்தை தோல்வி
By DIN | Published On : 05th July 2019 04:14 AM | Last Updated : 05th July 2019 04:15 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜகண்டிகை பகுதியில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் 15 பேரை மீண்டும் பணியில் சேர்ப்பது குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் போராட்டத்தைத் தொடர தொழிலாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இந்த மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு நடப்பாண்டு இறுதி வரை ஒப்பந்தம் உள்ள நிலையில், முன்னறிவிப்பின்றி ஜூலை 1 முதல் அவர்கள் பணிக்கு வர வேண்டாம் என தொழிற்சாலை நிர்வாகத்தினர் அறிவிப்பு தந்தனர்.
அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களும், பிற ஒப்பந்தத் தொழிலாளர்களும் தொழிற்சாலை முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்று நிர்வாகத்துடன் நடைபெற்ற இரு கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் வியாழக்கிழமையும் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளர் கே.ரவி, அக்கட்சியின் கும்மிடிப்பூண்டி நிர்வாகி அருள், முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தொழிலாளர்களுடன் பேசினர்.
அதன் பின் அங்கு வந்த தொழிற்சாலை நிர்வாகிகள் இது குறித்து சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தனர். அதன்படி, சென்னையில் தொழிலாளர்களின் சார்பாக தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க இயலாது என்று தொழிற்சாலை நிர்வாகத்தினர் உறுதியாகத் தெரிவித்தனர். இதனால் தொழிற்சங்கத்தினர் இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகக் கூறி, போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்து விட்டு வெளியேறினர்.
இதையடுத்து, தொழிற்சங்கத்தினர் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபுவைச் சந்தித்தனர். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களைப் பணியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர். இந்தப் பிரச்னை முடியும் வரை தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.