Enable Javscript for better performance
திருவள்ளூர் பகுதி ஏரிகளில் தொடரும் மணல் கடத்தல்- Dinamani

சுடச்சுட

  

  திருவள்ளூர் பகுதி ஏரிகளில் தொடரும் மணல் கடத்தல்

  By DIN  |   Published on : 11th July 2019 04:16 AM  |   அ+அ அ-   |    |  

  tiruvallur


  திருவள்ளூர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் செம்மண்ணை அகற்றிவிட்டு, அடிப்பகுதியில் கிடைக்கும் ஆற்று மணலை நூதன முறையில் சாக்குப் பைகளில் அள்ளிக் கடத்துவதால், ஏரியில் அதிகளவில் பள்ளங்கள் உருவாகி வருகின்றன. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். 
  திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம், கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆற்றுப்படுகைகளில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் பெரிய அளவிலான ஏரிகள் 338, ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் 654 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் தான் கிராமங்களின் ஆழ்துளைக் கிணறுகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாய கிணறுகளின் நீர் ஆதாரமாகவும் இருந்து வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஏரிகள் தூர்வாரப்படாத நிலையில், மண்மேடாக மாறி வருகின்றன. தற்போது போதிய மழை பெய்யாத நிலையில், ஏரிகளில் நீர் ஆதாரம் இன்றி முள்புதர்கள் அடர்ந்து காணப்படுகின்றன.  
   பூண்டி, ஏகாட்டூர், புல்லரம்பாக்கம், புட்லூர், கிளாம்பாக்கம், கடம்பத்தூர், புன்னம்பாக்கம், ராமதண்டலம், புத்தேரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகள் ஏரிகளில் பள்ளம் தோண்டி, மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். அதாவது ஏரிகளில், மேலே உள்ள செம்மண்ணை அகற்றிவிட்டு, உள்பகுதியில் இருக்கும் ஆற்று மணலை சாக்குப் பைகளில் சேகரிக்கின்றனர். அதைத் தொடர்ந்து, இரவு நேரங்களில் சாலைப் பகுதிக்குக் கொண்டு வந்து வாகனத்தில் கடத்திச் செல்கின்றனர். இதேபோல், ஒவ்வொரு நாளும் மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களிலும் கடத்திச் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் ஏரிகளில் பெரிய பள்ளங்களாக காட்சி அளிப்பதுடன், அவற்றின் பரப்பு சமமற்ற நிலையில் உள்ளது. ஏற்கெனவே இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரவில்லை. இதனால் பலர் ஆக்கிரமிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தடுக்க முயன்றால், ஆக்கிரமிப்பாளர்கள் தாக்க முயற்சிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  
  தற்போது அரசு அதிகாரிகளின் கடும் சோதனைகளால், ஏரிகளில் இருந்து மணல் அள்ளி டிராக்டர்களில் மணல் கடத்த முடியாத நிலை உள்ளது.
  அதேசமயம் கிராமங்களிலும் கட்டடப் பணிகளுக்கு மணல் தேவை உள்ளதால், அங்குள்ளவர்கள் சாக்குப் பைகளில் மணல் அள்ளிக் கடத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த ஒரு சாக்குப் பை மணல் ரூ. 80 வரை விலை கொடுத்து வாங்கவும் தயாராக உள்ளனர். இதனால், கிராமங்களில் உள்ளவர்கள் அதிகமாக மணல் கடத்திச் செல்வதாகக் கூறப்படுகிறது. 
  இதுகுறித்து ஏகாட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியது:
  ஏகாட்டூர் ஏரி 80 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை நம்பி 400 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் உள்ளன. இந்த ஏரியின் நீர் ஆதாரத்தை எதிர்பார்த்தே இங்குள்ள விவசாயக் கிணறுகள் உள்ளன. ஆனால், ஏரியில் செம்மண்ணை மட்டும் அகற்றிவிட்டு, அடிப்பகுதியில் ஆற்று மணலை அள்ளி சமதளப் பரப்பில் கொட்டி சேகரிக்கின்றனர். அதைத் தொடர்ந்து, சாக்கு பைகளில் அள்ளி வாகனங்களில் கடத்திச் செல்கின்றனர். இதை தட்டிக் கேட்டால் குண்டர்கள் போல் பேசி தகராறு செய்கின்றனர். இதற்கு முன்பு வரை வருவாய், காவல் துறையினர் கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் அதிகாலை ரோந்து சென்ற பின், ஆங்காங்கே ஆள்களை நிறுத்தி வைத்து, அதிகாரிகள் தொடர்பான தகவல் அளித்தால் ஓடிப்போய் மறைந்து கொள்கின்றனர். இதுபோன்று தொடர்ந்து மணல் அள்ளுவதால் ஏரியில் பெரியளவிலான பள்ளங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தண்ணீரை சமமாகத் தேக்கி வைக்க முடியாத நிலையும், கலங்கள் வழியாக வெளியே தண்ணீர் செல்ல இடையூறும் ஏற்பட்டுள்ளது. பிற பகுதிகளில் ஏரிகள் தூர்வாரப்படுகின்றன. ஆனால், திருவள்ளூர் பகுதியில் மட்டும் ஏரிகளைத் தூர்வார எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், தூர்வாரி அதிகளவில் தண்ணீர் தேக்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
  இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில், தற்போதுதான் புதிதாக பொறுப்பேற்று உள்ளேன். அதனால், இந்த மாவட்டத்தின் முழு விவரங்களையும் அதிகாரிகள் மூலம் அறிந்து கொண்டு, ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்நிலையில், ஏரிகளில் ஆற்று மணல் அள்ளிக் கடத்துவோர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். இதை கவனத்தில் கொண்டு ஆய்வு செய்து, கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai