நீர் மேலாண்மை திட்டப் பணிகள்: மத்தியக் குழுவினர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நீர் மேலாண்மைத் திட்டப் பணிகளை மத்தியக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நீர் மேலாண்மைத் திட்டப் பணிகளை மத்தியக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மத்திய அரசின் நீர் மேலாண்மைத் திட்டம் (ஜல் சக்தி அபியான்) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் மற்றும் மத்திய அரசின் வடகிழக்குப் பிராந்திய பொருளாதார ஆலோசகர் மம்தா சங்கர் ஆகியோர் தலைமையில்  உறுதிமொழி ஏற்கப்பட்டது. இது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியும் தொடங்கியது. 
அப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசியது:
மத்திய நிலத்தடி நீர்மட்ட ஆய்வக வாரிய அறிக்கையின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 21 வருவாய் குறு வட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. நீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய குடிநீர் மற்றும் நீர் மேலாண்மை அமைச்சகத்தின் மூலம், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை ஆலோசகர்  மம்தா சங்கர் தலைமையில் 9 அதிகாரிகளைக் கொண்ட நான்கு குழுக்கள் இந்த மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு திருவள்ளூர் மாவட்டத்தில் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை (மூன்று நாள்கள்) தங்கியிருந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நீர் மேலாண்மை தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டம் உயரத் தேவையான ஆலோசனைகளை அவர்கள் மேற்கொள்வர். மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் நீர் மேலாண்மைத் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்தியக் குழுவினருடன் ஆட்சியர் தலைமையில், தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள 21 வருவாய் குறு வட்டங்களில் 15 குறு வட்டங்கள் திருவள்ளுர் மாவட்ட எல்லைக்கும், 6 குறு வட்டங்கள் சென்னை மாவட்ட எல்லைக்கும் உட்பட்டவை  என்றார் அவர்.
கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நீர் மேலாண்மை பணிகள் குறித்து சிறப்பு குழுவினருக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விளக்கினார். மேலும் அரசால் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மைப் பணிகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் பெருகியிருப்பதன் விவரம் மத்தியக் குழுவிற்கு விளக்கப்பட்டது. 
தற்போது "மும்மாரி' என்ற பெயரில் தனியார் நிறுவனம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமான 100 நீர்நிலைகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டு, முதல் கட்டமாக 25 நீர்நிலைகள் சீரமைக்கப்பட இருப்பது தொடர்பாக குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது. 
மேலும், "வாழும் கலை' அமைப்பின் தொழில்நுட்ப உதவியுடன் ஆறுகளை சீரமைக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ஆறுகளுக்கான நீர்வரத்துக் கால்வாய்களில் கூழாங்கற்களை கொண்ட தடுப்பணைகள் அமைத்து, நீர் உறிஞ்சி கிணறுகள் அமைக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று விளக்கப்பட்டது. அதன்படி தற்போது பெருமளவு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இப்பணியை மேற்கொள்ள ஏதுவாக முதல் கட்டமாக கொசஸ்தலையாற்று நீர்வரத்துக் கால்வாய்களில் நீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்க சிறப்பு முயற்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து மத்தியக் குழுவிடம் எடுத்துக் கூறப்பட்டது.
நீர் மேலாண்மை குறித்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள பணிகளை மத்தியக் குழுவினர் பாராட்டினர். தொடர்ந்து அக்குழுவினர் ஆட்சியருடன் இணைந்து கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், நுங்கம்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு நீர் வள மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டு வரும் தடுப்பணைக்கான பணிகளைப் பார்வையிட்டனர். 
மத்தியக் குழுவினர் சனிக்கிழமையும் மாவட்டத்தில் தங்கியிருந்து பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நீர் மேலாண்மைப் பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com