அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயிலில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரிக்கை

திருநின்றவூர் கோமதிபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவுவாயிலில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருநின்றவூர் கோமதிபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவுவாயிலில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
 இந்தப் பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதன் அருகில் காவல்துறையினரின் குடியிருப்பும் உள்ளது.
 இந்தப் பள்ளியின் நுழைவு வாயிலை ஒட்டி கழிவு நீர் ஆறாக ஓடுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இங்கு கழிவு நீர் தேங்கியுள்ளதால் குழந்தைகள், முதியோர், வியாபாரிகள், அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்போர் என பலருக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
 கழிவு நீர் தேங்கியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் விற்கும் தின்பண்டங்களில் கொசுக்களும், ஈக்களும் மொய்க்கின்றன. மாணவர்கள் அவற்றை வாங்கி உண்பதால் அவர்களது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. பள்ளியின் நுழைவு வாயில் முதல் சுற்றுச்சுவரை சுற்றிலும் குளம், குட்டைப் போல் கழிவு நீர் தேங்கியிருப்பதால் மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.
 கழிவு நீரை வெளியேற்ற முறையாக கால்வாய்களை அமைத்து, அடைப்பு ஏற்பட்டுள்ள சிறு கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்றும் குடியிருப்புப் பகுதிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பூந்தமல்லி ஒன்றிய உறுப்பினர் டி.கணேசன், திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் சுகாதாரத் துறை ஆய்வாளர் ஆகியோரிடம் மனு அளித்தார்.
 அந்த மனுவில், "சிறு கால்வாயை சீரமைக்க பேரூராட்சியில் நிதி இல்லாததால் பேரூராட்சி நிர்வாகத்தினர் திணறுகின்றனர்.கடந்த 2 ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கியுள்ளதால் ஏராளமான கொசுக்கள் உருவாகி அவை கடிப்பதால் இந்த வளாகத்தை சுற்றி வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அவல நிலையை பேரூராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com