திரௌபதி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் தீ மிதி விழா

தும்பிகுளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித் திருவிழாவில்

தும்பிகுளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உள்பட்டது தும்பிகுளம் கிராமம். இங்கு முக்கிய விழாவான திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான தீ மிதித் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
தினந்தோறும் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்தும், படையலிட்டும் அம்மனை வழிபட்டனர். 
 இரவு 7 மணிக்கு காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் கோயில் முன்பு இருந்த அக்னி குண்டம் முன்பு குவிந்தனர். அப்போது ஊர் எல்லையில் இருந்து எடுத்து வரப்பட்ட பூங்கரகம் அக்னி குண்டத்தில் இறங்கி, பக்திப் பரவசத்துடன் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, வாண வேடிக்கையும், இன்னிசை கச்சேரியும் நடைபெற்றன.
 விழாவில் தாழவேடு, சந்தானகோபாலபுரம், நெமிலி, பொன்பாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு, திரௌபதி அம்மனை வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். 
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தீமிதி விழா நடைபெற்றது.
 இக்கோயிலில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தாண்டு தீமிதித் திருவிழா நடத்த திட்டமிட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் 27-ஆம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து, தீமிதி விழாவின் முதல் நாளான ஜூலை 5-ஆம் தேதி கணபதி பூஜை, அனுக்ஞை, புண்யாவாசனம், கொடியேற்றுதல், அம்மனுக்கு காப்பு கட்டுதல், யாக சாலை பூஜை, ராஜராஜேஸ்வரி அம்மன் திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றன.
 தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் யாக சாலை பூஜை, ஹோமம் மற்றும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றன.
 விழாவின் ஒன்பதாம் நாளான சனிக்கிழமை (ஜூலை 13)  காப்பு கட்டுதல், மயானக் கொள்ளை, ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அம்மன் ஊர்வலம் உள்ளிட்டவை நடைபெற்றன.
 விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை யாக சாலை பூஜை, ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, காப்பு கட்டிய 628 பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து, ஸ்ரீ பார்வதி அம்மனை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. 
  விழாவில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com