சரவணப்பொய்கையில் தெப்பல் கட்டும் பணி தீவிரம்
By DIN | Published On : 19th July 2019 12:27 AM | Last Updated : 19th July 2019 12:27 AM | அ+அ அ- |

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை தெப்பல் திருவிழாவுக்காக சரவணப்பொய்கையில் தெப்பல் கட்டும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.
திருத்தணி முருகன் கோயிலில், வரும் 24 முதல் 28-ஆம் தேதி வரை 5 நாள்கள் ஆடிக்கிருத்திகை விழா நடைபெற உள்ளது. இதில், 26 முதல் 28 வரை, மூன்று நாள்கள் சரவணப்பொய்கை எனும் திருக்குளத்தில் தெப்பல் திருவிழா நடைபெற உள்ளது.
இதற்காக கோயில் சரவணப்பொய்கையில் தெப்பல் கட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விழாவில் 3 நாள்களும் மாலை 6 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் மலைக்கோயிலில் இருந்து திருக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பலில் எழுந்தருளி முதல் நாள் 3 சுற்றுகளும், 2-ஆம் நாள் 5 சுற்றுகளும், 3-ஆம் நாள் 7 சுற்றுகளும் குளத்தைச் சுற்றி வருவர். இதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.
இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆடிக்கிருத்திகையையொட்டி நடக்கும் தெப்பல் திருவிழாவுக்காக குளத்தில், 30 அடி அகலம், 30 நீளம் கொண்ட தெப்பல் அமைக்கும் பணிகள் சில நாள்களாக நடந்து வருகிறது. இப்பணியை 22-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியில் 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.