பவானி அம்மன் கோயிலில்  தீமிதி விழா

திருவள்ளூர் ராஜாஜிபுரத்தில் உள்ள பவானி அம்மன் - அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித்

திருவள்ளூர் ராஜாஜிபுரத்தில் உள்ள பவானி அம்மன் - அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.  
இக்கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கி, 4 நாள்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தீமிதித் திருவிழா நடைபெற்றது. அம்மனை வேண்டிக் கொண்டு தீ மிதித்தால் இதுவரை நிறைவேறாத திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் வளர்ச்சி ஆகியவை ஏற்படுவதோடு, கடன் சுமை போன்ற பிரச்னைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 
இதற்காக கோயில் வளாகத்தில் விழாக் குழுவினரால் அக்னி குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. தீமிதி விழாவில் திருவள்ளூர், ராஜாஜிபுரம், பெரியகுப்பம் மணவாளநகர், காக்களூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அக்னி குண்டத்தில் இறங்கித் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். 
அதற்கு முன் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆடித் திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 
வெக்காளியம்மன் கோயிலில்...
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட குமரன்நாயக்கன் பேட்டையில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தீமிதி விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டிய பக்தர்கள் 900 பேர் வேப்பிலை அணிந்து, தீமித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வெக்காளியம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஈகுவார்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், கோவில் நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், பாபு, சுதாகர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com