தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆக.7-இல் மாணவர்களுக்குப் போட்டிகள்
By DIN | Published On : 24th July 2019 06:28 AM | Last Updated : 24th July 2019 06:28 AM | அ+அ அ- |

திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல் நிலைப்பள்ளி(மெட்ரிக் பள்ளிகள் உள்பட) பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கவிதை, கட்டுரை, பேச்சு ஆகிய போட்டிகள் ஆக. 7-ஆம் தேதி நடத்தப்பட உள்ளன. இப்போட்டி மேற்குறிப்பிட்ட நாளில் திருவள்ளூர் அருகே மணவாளநகரில் செயல்பட்டு வரும் நடேச செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில், ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒரு போட்டிக்கு தலா ஒருவர் வீதம் மூன்று பேர் மட்டும் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து அடையாளச் சான்றுகளைப் பெற்று வர வேண்டும்.
இப்போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடங்களைப் பெறும் பள்ளி மாணவர்களுக்கு, முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். இதில், மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதியுடையவர் ஆவர்.