Enable Javscript for better performance
சம்பா பருவத்துக்குத் தேவையான உரங்களை இருப்பு வைக்க நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சம்பா பருவத்துக்குத் தேவையான உரங்களை இருப்பு வைக்க நடவடிக்கை

    By DIN  |   Published on : 25th July 2019 07:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெற்பயிர் சாகுபடியை மேற்கொள்ளத் தேவையான உரங்கள் மற்றும் இடுபொருள்கள் ஆகியவை உரக்கடைகளிலும், வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை இணை இயக்குநர் பாண்டியன் தெரிவித்துள்ளார். 
    இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
    திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பயிர் நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளதால் நடப்பு சம்பா பருவத்தில் 52 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சம்பா பருவத்துக்குத் தேவையான உரங்கள் 20 ஆயிரம் மெட்ரிக் டன்கள் வரையில் கூட்டுறவு வேளாண் சங்கங்களிலும், தனியார் உரக் கடைகளிலும் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
    இதில், வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைந்தபட்சம் யூரியா-10 மெட்ரிக் டன், டி.ஏ.பி. மெட்ரிக் டன், பொட்டாஷ் -5 மெட்ரிக் டன், கலப்பு உரங்கள்-5 மெட்ரிக் டன்னும் இருப்பு வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் 1,500 மெட்ரிக் டன்களும், தனியார் உர விற்பனை நிலையங்களில் 6,500 மெட்ரிக் டன், உர கிட்டங்கிகளில் 2 ஆயிரம் டன்களும் என மொத்தம் 10 ஆயிரம் மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    இதன் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு சம்பா சாகுபடிக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நேரடி மானியத் திட்டத்தில் உரம் வாங்கும் போது, விரல் ரேகை மற்றும் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள விலைக்கே வாங்குவதுடன், கட்டாயம் ரசீது பெற்றுக் கொள்ளவும் வேண்டும். மேலும், ரசீது வழங்காத கடைக்காரர்கள் மீது அந்தந்தப் பகுதி வேளாண்மை உதவி இயக்குநரிடம் புகார் தெரிவிக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai