Enable Javscript for better performance
திருவள்ளூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் சங்க காலக் கிணறுகள்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் சங்க காலக் கிணறுகள்

    By DIN  |   Published on : 25th July 2019 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    well


    திருவள்ளூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் சங்க காலத்தைச் சேர்ந்த, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, செங்கற்களால் கட்டப்பட்ட கிணறு மற்றும் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் தொல்பொருள் துறையினர் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    கற்கால வாழ்விடங்கள் நிறைந்த பகுதி:  தமிழகத்தில் கற்கால வரலாற்றுக்கு பல்வேறு சான்றுகளை வழங்கும் பகுதியாக திருவள்ளூர் விளங்கி வருகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட கற்கால வாழ்விடங்கள் அமைந்துள்ளன. 
    அவற்றில், அதிரம்பாக்கம், குடியம், வடமதுரை, நெய்வேலி, பரிக்குளம் ஆகிய பகுதிகளில் தொல்பொருள் துறையால் நடத்தப்பட்ட அகழாய்வுகள் மூலம் கற்கால மனிதர்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள முடிகிறது. அதன்படி, தமிழகத்தின் கற்கால வரலாறு தெரிய வருகிறது.
    அதேபோல், திருவள்ளூர் அருகே கொசஸ்சலை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பட்டரைப்பெரும்புதூர் கிராமத்தில் நடந்த அகழாய்வில் கற்கருவிகள் மட்டுமின்றி இரும்புக் காலம் மற்றும் வரலாற்றுத் தொடக்க கால தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு கடந்த 2015-16-இல் தமிழக அரசின் தொல்லியல் துறையால் அகழாய்வுப் பணி முதல் முறையாக நடத்தப்பட்டது. அப்போது ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய கிராமங்களில் 300 சதுர மீட்டர் பரப்பளவில் நடந்த அகழாய்வில் 12 குழிகள் தோண்டப்பட்டன. அங்கு 203 வகையான தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
    1,201 வகையான தொல்பொருள்கள்: இதன் தொடர்ச்சியாக கடந்த 2017-18-ஆம் ஆண்டிலும் பட்டரைப்பெரும்புதூரில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 525 சதுர மீட்டர் பரப்பளவில் 21 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு 1,201 வகையான தொல்பொருள்கள் கிடைத்தன. அதில் பழங்கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள், இரும்புக் கருவிகள், எலும்பு மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட மணிகள், பவளம், பளிங்கு, செவ்வந்திக்கல் போன்ற அரிய வகைக் கற்களால் செய்யப்பட்ட மணிகள், கல்மணிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணாலான பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், காதணிகள், சில்லுகள், செம்பினால் செய்யப்பட்ட பொருள்கள், யானைத் தந்தத்தால் ஆன பொருள்கள், எலும்பினால் செய்த அம்பு முனைகள், அம்மிக்கல், தீட்டுக்கற்கள், தேய்ப்புக் கற்கள், சோழ மன்னன் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் வெளியிடப்பட்ட செப்புக் காசு, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அடங்கும். இவை அனைத்தும் பூண்டி தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 
    2 ஆயிரம் ஆண்டு தொன்மையான கிணறு: இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்காத வகையில், பட்டரைப்பெரும்புதூரில் சுடு மண்ணாலான உறை கிணறும், செங்கற்களால் கட்டப்பட்ட வட்ட வடிவ கிணறும் அகழாய்வில் கண்டறியப்பட்டது. இந்தக் கிணறு தரைப்பகுதியில் இருந்து 2.85 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கிணறு, பழங்காலத்தில் இருந்தது போல் செங்கற்கள் உடையாமல் அப்படியே உள்ளது. இதன் விட்டம் 2.60 மீட்டர் (வெளிப்புறம்) அளவில் உள்ளது. கிணற்றின் மொத்த ஆழம் 3.91 மீட்டர். செங்கற்களின் கட்டுமானம் 56 அடுக்குகளைக் கொண்டுள்ளது.
    முதல் முறையாக...: தமிழகத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த இதுபோன்ற பெரிய அளவிலான கிணறு கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும். செங்கற்களால் கட்டப்பட்ட கிணறு கண்டறியப்பட்டுள்ளது அகழாய்வின் சிறப்பம்சம். 
    இது பழந்தமிழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், நீர் மேலாண்மைக்கு உதாரணமாகவும் திகழ்கிறது. இதை பொதுக் கிணறாக மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதிலிருந்து அக்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய முடிகிறது. எனினும், உறைகிணற்றையும், செங்கற்களால் ஆன கிணற்றையும் பாதுகாப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 
    திறந்தவெளியில்...: 
    இதனால், அகழாய்விற்காக தோண்டியபோது கொட்டிய மண் சரிந்து விழும் நிலை காணப்படுகிறது. சங்ககாலக் கிணறு என்பதால் அதை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் தொல்பொருள் துறையினர் பாதுகாக்க வேண்டும். அதற்கு, கிணற்றைச் சுற்றிலும் பாதுகாப்புச் சுவரையும், கிணறு, உறைகிணறு உள்ள பகுதியில் தாழ்வாரம் அமைத்தும் பாதுகாக்க வேண்டும் என தொல்பொருள் ஆய்வாளர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. 


    பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும்: இதுகுறித்து பூண்டி அருங்காட்சியக காப்பாட்சியர் லோகநாதன் கூறியது:
    இந்த அகழாய்வின் மூலம் இப்பகுதியில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. எனவே பல்வேறு கால கட்டங்களை அகழாய்வு வெளிப்படுத்தியிருந்தாலும் வரலாற்றுத் தொடக்க காலம் அதாவது சங்க காலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்வியலுக்கு இக்கிணறு சான்றாக விளங்குகிறது.
    வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் நோக்கத்தில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக இக்கிணற்றை அறிவிக்குமாறு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தக் கிணறும், உறைகிணறும் அமைந்துள்ள பகுதியை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சுவர், தாழ்வாரத்தை ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai