Enable Javscript for better performance
மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவிகள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    
    demand


    மடிக்கணினி கேட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் புதன்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவிகள் என மொத்தம் 30-க்கும் மேற்பட்டோர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் வந்து தலைமை ஆசிரியரிடம் விலையில்லா மடிக்கணினி கேட்டனர். 
    அதற்கு தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் இன்னும் 3 மாதங்களுக்குள் கண்டிப்பாக அனைவருக்கும் கிடைக்கும் என கல்வித்துறை தெரிவித்துள்ளதாகத் தெரிவித்து மாணவிகளை அனுப்பி வைத்தார். 
    அதைத்தொடர்ந்து, பள்ளிக்கு வெளியே வந்த மாணவிகள் மடிக்கணினிகள் கேட்டு கோஷம் எழுப்பினர். பின்னர், திருத்தணி கமலா திரையரங்கம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மடிக்கணினிகள் கேட்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அப்போது, நடப்பாண்டில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் இரு நாள்களுக்கு முன் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 முடித்து 2 ஆண்டுகள் ஆகியும், எங்களுக்கு மடிக்கணினிகள் வழங்கவில்லை. 
    அரசு உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் எனக் கோரி கோஷம் எழுப்பினர்.
    தகவல் அறிந்து அங்கு வந்த திருத்தணி டி.எஸ்.பி. சேகர் மற்றும் போலீஸார் மாணவிகளிடம் சமரசம் பேசினர். அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக உறுதி அளித்ததின்பேரில், மாணவிகள் சாலை மறியலைக் கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai