முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
ஆசிரியர்களுக்கான மனவளக்கலை பயிற்சி
By DIN | Published On : 30th July 2019 04:28 AM | Last Updated : 30th July 2019 04:28 AM | அ+அ அ- |

பள்ளிகளில் மாணவ, மாணவிகளை நெறிப்படுத்தும் வகையில்நடைபெற்ற மனவளக்கலை பயிற்சி முகாமில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 260 பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் 2 ஆயிரம் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் அருகே கொழுந்தலூர் பிருந்தாவன் ஹார்ட்புல்னஸ் தியான மையத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான மனவளக்கலை பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு,ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்து மனவளப்பயிற்சியைத்தொடங்கி வைத்துப்பேசியது:
மாணவ, மாணவிகள் வீட்டில் பெற்றோர்களிடம் இருப்பதை விட பள்ளிகளில் ஆசிரியர்களிடம் அதிகம் நேரம் உள்ளனர். அதனால், ஒவ்வொரு மாணவ, மாணவிகளைப்பற்றி ஆசிரியர்கள் தான் அறிந்து கொண்டு, அதற்கேற்ப சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். ஆனால், தற்போதைய நிலையில் அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகம் நடைபெறுகிறது. அதைத்தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில்ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும், ஒவ்வொரு பள்ளி ஆசிரியர்களும் கிராமங்களில் நேரடியாக வீடுவிடாகச்சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் மூலம் கடந்தாண்டை விட, நிகழாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதை ஆசிரியர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு மாணவ, மாணவிகளை நெறிப்படுத்தவும் மற்றும் நல்ல முறையில் வழிகாட்டும் நோக்கிலும்பள்ளித்தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மனவளக்கலை பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஹார்ட்புல்னஸ் தியான அமைப்பு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தியானம், யோகாசனம் உள்ளிட்டவை குறித்துமனவளக்கலை பயிற்சி 2 நாள்களுக்கு வழங்கப்படுகிறது. இதில்பங்கேற்று, மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்தி நெறிப்படுத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன், ஹார்ட்புல்னஸ் தியான மையத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவேந்திரன், திட்ட இயக்குநர் பரத் மாதவன், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.