முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
செங்குன்றம் அருகே சாலை மறியல்
By DIN | Published On : 30th July 2019 04:28 AM | Last Updated : 30th July 2019 04:28 AM | அ+அ அ- |

செங்குன்றம் அருகே மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஞாயிற்றுகிழமை இரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்குன்றம் அருகே நல்லூர் ஊராட்சிக்குள்பட்ட சோலையம்மன் நகரில் உள்ள 40 அடி சாலை கடந்த 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இங்கு கட்டடங்கள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டதால் தற்போது இந்தச் சாலை 30 அடியாக சுருங்கி விட்டது. இந்நிலையில், சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமாரிடம் மனு அளித்திருந்தனர்.
இதையடுத்து, ரூ.35 லட்சம் செலவில் 800 மீட்டர் தூரத்திற்கு சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலையை சீரமைக்கக்கூடாது எனக்கூறி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுகிழமை இரவு திருவள்ளூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செங்குன்றம் போலீஸார் சம்பவ இடத்தில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை ஆக்கிரமிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியலால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.