"பால் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'
By DIN | Published On : 01st June 2019 11:56 PM | Last Updated : 01st June 2019 11:56 PM | அ+அ அ- |

பொதுமக்களிடம் பால் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என முகவர்களுக்கு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பால்வளத் தலைவர் வேலஞ்சேரி சந்திரன் கேட்டுக் கொண்டார்.
காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில், சர்வதேச பால் தின விழா திருவள்ளூரில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொது மேலாளர் ராமநாதன் தலைமை வகித்தார். இதில், திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் வேலஞ்சேரி சந்திரன் பேசியது:
குழந்தைகளுக்கு பற்கள் வலுவாக இருப்பதற்கு பால் மிகவும் முக்கியம். அதேபோல், முதியோருக்கு எலும்பு தேய்மானத்தைப் போக்கவும், உணவு உட்கொள்ள முடியாத நிலையில் உணவாகவும் பயன்படுவது பால். பாலின் அவசியத்தை எடுத்துரைக்கும் நோக்கில், சர்வதேச அளவில் பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உறுதியேற்க வேண்டும்.
தற்போது திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கீழ் 589 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில், திருவள்ளூரை அடுத்த காக்களூரில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கீழ் உள்ள, 245 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலம் நாள்தோறும் 1.25 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்து, செறிவூட்டப்பட்டு, பால் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து, 100 வகையான பால் பொருள்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால் நாள்தோறும் 1.25 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சங்க உறுப்பினர்களுக்கு நிலுவையில் வைத்துள்ள ஊக்கத் தொகை ரூ. 2 கோடி விரைவில் விடுவிக்கப்படும். பால் பொருள்களை அதிகம் பயன்படுத்த பொதுமக்களிடையே முகவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து, சிறப்பாகச் செயல்பட்ட உற்பத்தியாளர் சங்க உறுப்பினர் மற்றும் பால் உற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பால்வள துணைத் தலைவர் ஏழுமலை, துணைப் பதிவாளர் (பால்வளம்) சந்திரசேகரன், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், செயலர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.