வேப்பம்பட்டு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் திருநின்றவூர்-வேம்பம்பட்டு இடையே ரயில்வே கடவுப்பாதையின் குறுக்கே

சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் திருநின்றவூர்-வேம்பம்பட்டு இடையே ரயில்வே கடவுப்பாதையின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிக்காக ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை போலீஸார் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
 சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில்,  திருநின்றவூர் - வேப்பம்பட்டு இடையே ரயில்வே கடவுப்பாதை எண் 13 உள்ளது. இதைப் பயன்படுத்தி, வேப்பம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தினர் பெருமாள்பட்டு, புதுச்சத்திரம், திருமழிசை,  பூந்தமல்லி வழியாக சென்னை சென்று வந்தனர். 
 ரயில்கள் வரும் போதெல்லாம் இந்த கடவுப்பாதை அடிக்கடி மூடப்படுவதால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து இப்பகுதியில் ரூ.28.72 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
 வேப்பம்பட்டு - பெருமாள்பட்டு பகுதியை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைப் பகுதியில் 16 தூண்கள், ரயில்வே பகுதியில் 2 தூண்கள் என மொத்தம் 18 தூண்களுடன் மேம்பாலம் அமைக்கத்த தீர்மானிக்கப்பட்டது.
 அதன்படி ரயில்வே பகுதியில் இரு தூண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் நிறைவடைந்தது. நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய்த்துறையினர் மேற்கொள்ளாததால், மேம்பாலப் பணிகள் துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. 
 இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவின் பேரில்  ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த அரசுக்குச் சொந்தமான 20 சென்ட நிலத்தில், கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது. அப்போது வீட்டைக் காலி செய்ய 2 நாள்கள் அவகாசம் தேவையென பெண்கள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கெனவே 3 மாதத்திற்கு முன்பே முறைப்படி நோட்டீஸ் வழங்கியிருப்பதால் அதிகாரிகள் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com