நிலம் அபகரிப்பு: மகன் மீது நடவடிக்கை கோரி மூதாட்டி மனு
By DIN | Published On : 14th June 2019 03:46 AM | Last Updated : 14th June 2019 03:46 AM | அ+அ அ- |

வீட்டுமனையை அபகரித்த மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி ஒருவர் வியாழக்கிழமை மனு அளித்தார்.
திருவள்ளூர் அருகே உள்ள புதிய திருப்பாச்சூர் பூக்கார தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளையின் மனைவி சின்னகண்ணு (63). இவருக்கு குணசேகரன், ரகு, என மகன்களும், பேபி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், தங்கள் நிலத்தை மகன் அபகரித்துக்கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் சின்னகண்ணு வியாழக்கிழமை மனு கொடுத்தார்.
மனுவில், திருவள்ளூர் மாவட்டம், திருப்பத்தூர், கிராமத்தில் எனக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்நிலையில் எனது மகன் குணசேகரன் மட்டும் எங்களுக்கு சொந்தமான மொத்த சொத்துகளையும், எங்களுக்கு சொந்தமான வீட்டையும் எடுத்துக்கொண்டார். தற்போது வீடின்றி தவித்து வருகிறோம். எவ்வித பண உதவியும் செய்யாமல் எங்களுக்குச் சேர வேண்டிய எனது கணவரின் பெயரில் உள்ள சொத்துகளை அவரே அனுபவித்துக் வருகிறார்.
எனக்கும் எனது மகளுக்கும் சேரவேண்டிய எனது கணவரின் பெயரில் உள்ள சொத்துகளை எங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.