மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகக் கட்டடம்: முதல்வர் திறந்து வைத்தார்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ. 205 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட  மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ. 205 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட  மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தார். 
திருவள்ளுர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இரண்டு சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகங்கள் இயங்கிவருகின்றன. இதில், திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தின் கீழ், திருவள்ளூர், பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் ஆவடி ஆகிய ஆறு வட்டங்கள் அடங்கியுள்ளன. இந்த  அலுவலகத்தின் கீழ், 1,185 தொழிற்சாலைகளுக்கு நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 ஆகிய சட்டங்களின் கீழ் வாரியத்தால் இசைவாணை வழங்கப்பட்டு இயங்கி வருகின்றன. 
இந்த அலுவலகம் தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வகம் ஆகியவற்றுக்கு புதிய கட்டடமானது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்ட உத்தேசிக்கப்பட்டு, ரூ. 205 லட்சம் வழங்க வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, ரூ. 40 லட்சம் வாரிய வரம்பிலும் ரூ. 165 லட்சம் பொதுப்பணித் துறை மூலமும் கட்டடம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது. 
இக்கட்டடமானது தரை மற்றும் இரண்டு தளங்கள், 5,100 சதுர அடி பரப்பளவில் பொதுப்பணித் துறை மூலம் கட்டப்பட்டுள்ளது. 
இக்கட்டடத்தின் தரைத்தளத்தில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் ஓய்வு அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, மின் தூக்கி வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. 
முதல் தளத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அறை, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அறை, இரண்டு உதவி பொறியாளர் அறை, அலுவலக அறை, கழிப்பறைகள், எழுது பொருள்கள் அறையும் அமைக்கப்பட்டுள்ளன, இரண்டாம் தளத்தில் ஆய்வுக் கூடம், கூட்ட அரங்கம், பதிவு அறை அமைக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி இக் கட்டடத்தை திறந்து வைத்தார். 
திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் மற்றும் ஆய்வகக் கட்டடத்திலிருந்து, ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் திரளான அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com