திருவள்ளூர் நகராட்சியில் ரூ. 2.30 கோடியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ஏற்பாடு: தண்ணீர் உறிஞ்சுவதைத் தடுக்க நடவடிக்கை 

திருவள்ளூர் நகராட்சியில் ரூ. 2.30 கோடியில் குடியிருப்புகள்தோறும் குடிநீர் குழாய்

திருவள்ளூர் நகராட்சியில் ரூ. 2.30 கோடியில் குடியிருப்புகள்தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதைத் தவிர்க்கும் வகையில் புளோமீட்டர் பொருத்தி பயன்பாட்டுக்கு ஏற்ப தண்ணீர் வரி வசூலிக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.  
திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகளில் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகம் என மொத்தம் 14 ஆயிரம் கட்டடங்கள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்குத் தேவையான குடிநீர் நாள்தோறும் வெள்ளியூர் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து 35 ஆயிரம் லிட்டரும், திருவள்ளூர் பகுதிகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து 15 ஆயிரம் லிட்டரும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து, ஒவ்வொரு குடியிருப்புக்கும் இணைப்பு மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தெருக் குழாய்கள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் சிலர் சட்டவிரோதமாக குடிநீர் இணைப்பைப் பயன்படுத்தி, மோட்டார் அமைத்து தண்ணீரை உறிஞ்சி வருகின்றனர். இதனால் தெருக் குழாய் மற்றும் பிற குடியிருப்புகளுக்கு சீரான தண்ணீர் விநியோகம் இல்லாத நிலை உள்ளது. 
தற்போதைய நிலையில், கடும் கோடை நிலவி வருவதால் அனைவருக்கும் சமமான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் அனுமதியில்லாமல் பெற்றுள்ள குடிநீர் இணைப்பை முறைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி கூறியது: நகராட்சியின் வருவாயை உயர்த்தும் நோக்கில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், முதலில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்கும் பணிகளில் முதல்கட்டமாக இறங்கியுள்ளது. 
அந்த வகையில், நகராட்சியில் 4,130 குடிநீர் இணைப்புகள் மட்டுமே உள்ளன. இதேபோல், நிகழாண்டில் 6,432 குடியிருப்புகளுக்கு ரூ. 2.30 கோடியில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
மேலும், இதற்காக நகராட்சிக்கு முன்பணமாகச் செலுத்த வேண்டிய ரூ. 12,500 கட்டணத்தை 3 தவணைகளில் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
மேலும் குடிநீர் இணைப்பு தேவை என்பவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து முறையாகப் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிய பின், தெருக்களில் உள்ள குழாய்களின் இணைப்பிலிருந்து குடிநீர் விநியோகம் என்பது தடை செய்யப்படும். 
மேலும், ஒவ்வொரு குடியிருப்பு குழாய்களுக்கும் தண்ணீர் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் ரூ. 2,500 மதிப்பிலான புளோ மீட்டர் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த புளோமீட்டர் குழாயில் பொருத்தப்பட இருப்பதால் குடிநீர் வீணாவதைத் தடுக்க முடியும். மேலும், மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் அது தானாக நின்று விடும் வகையில் மீட்டர் பொருத்தப்பட உள்ளது. இதுவரை அனைவருக்கும் ஒரே கட்டணமாக வரி வசூலிக்கப்பட்டது. 
தற்போதைய நடைமுறையில் மீட்டர் பொருத்தப்படுவதால் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 
இதனால், இத்திட்டத்துக்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com