திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதியின்றி அவதிக்குள்ளாகும் நோயாளிகள் 

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக உள்நோயாளிகள்

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக உள்நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் உடன் வருவோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் கூடுதல் விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
திருவள்ளூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைக்கு திருவள்ளூர், மணவாளநகர், திருவாலங்காடு, ஈக்காடு, பூண்டி, கடம்பத்தூர் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மேலும், இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் நோக்கில் 150 படுக்கை வசதிகள் உள்ளன. ஆனால், 200-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலை உள்ளது. அதே நேரத்தில் மகப்பேறு, டயாலிசிஸ், அவசர சிகிச்சை என உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், தற்போது கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு போதிய குடிநீர் வசதியில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சுகாதார வளாகங்களுக்கு பயன்படுத்துவதற்கும் தண்ணீர் இல்லாத சூழ்நிலை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குடிநீருக்காக சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டது. அதேபோல், இந்த மருத்துவமனை வளாகத்துக்குப் பின்புறம் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீரானது நீரேற்றம் செய்யப்பட்டு, சுகாதார வளாகம் மற்றும் குளியலறைகளுக்கு கடந்த காலங்களில் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் கூறுகின்றனர். 
இதுகுறித்து சமூக ஆர்வலர் தங்கராஜ் கூறியது:
மருத்துவமனை வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொருத்தப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போதைய நிலையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்ததால் நோயாளிகள் தரமான குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால்  வெளியில் கடைகளில் தரமில்லாத குடிநீர் கேன்களை வாங்கிப் பயன்படுத்தும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இங்கு கூடுதல் விலைக்கு குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. இரவு நேரங்களில் நோயாளிகளின் தேவையை உணர்ந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். 
அதனால் அரசு மருத்துவமனை நிர்வாகம் குடிநீர் மற்றும் சுகாதார வளாகங்களுக்கு பயன்படுத்தும் தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறியது:
இந்த மருத்துவமனைக்குத் தேவையான குடிநீர் மற்ற தேவைகளுக்கான தண்ணீர் 4 ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து எடுத்து விநியோகம் செய்து வருகிறோம். இதற்கு முன்பு வரை நோயாளிகள் உவர்ப்பு நீரையே  பயன்படுத்தும் நிலை இருந்தது. இவற்றைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் சுத்தமான குடிநீர்  கிடைப்பதற்கு நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டது. 
தற்போதைய நிலையில் இந்த இயந்திரம் பழுதாகி இருப்பதால் குடிநீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இயந்திரம் விரைவில் சீரமைக்கப்படும். அதேபோல், இந்த வளாகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கிணறுகளை சீரமைத்து, தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது என்றார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com