பெண் குழந்தைகள் திருமணத்தை தடுக்க வேண்டும்: நீதிபதி சரஸ்வதி

கிராமங்களில் இளைஞர் மன்றத்தினர், மகளிர் குழுக்கள் மற்றும் சமய ஆர்வலர்கள் ஆகியோர் பெண் குழந்தை

கிராமங்களில் இளைஞர் மன்றத்தினர், மகளிர் குழுக்கள் மற்றும் சமய ஆர்வலர்கள் ஆகியோர் பெண் குழந்தை திருமணம் நடைபெறாமல் தடுப்பதுடன், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் என மூத்த குடிமையியல் நீதிபதி சரஸ்வதி தெரிவித்தார். 
திருவள்ளூர் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் சிசிஎஃப்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய குழந்தைகள் திருமணம் தடுத்தல் மற்றும் சட்டவிழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் மூத்த குடிமையியல் நீதிபதியுமான சரஸ்வதி தலைமை வகித்துப் பேசியது:
பெண் குழந்தை திருமணம் செய்து வைத்தல் என்பது பாவச் செயல். இதனை, கிராமங்களில் ஒவ்வொரு இளைஞர் மன்றத்தினர், மகளிர் குழுவினர் ஆகியோர் சேர்ந்து தடுக்க வேண்டும். அத்துடன் பெற்றோர்களுக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 
இதற்கு முன்பு வரை கூட்டுக் குடும்ப முறையே இருந்தது. தற்போது குறிப்பிட்ட வயதை அடையாத நிலையில் போதிய பக்குவம் இல்லாத வயதில் திருமணம் செய்து வைப்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. அதனால் பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் மீனா பேசுகையில், மாநில அளவில் நடைபெறும் திருமணங்களில் 4 -இல் ஒரு பங்கு குழந்தை திருமணமாக நடைபெறுகிறது. தமிழக அளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் தான் 10 சதவீதம் குழந்தை திருமணம் நடைபெறுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 
கிராமங்களில் பெண் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு, குழந்தை திருமணத்தைத் தடுக்க வேண்டும் என்றார்.  
நிகழ்ச்சியில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்தில், பூண்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன்,   குழந்தைகள் நல அலுவலர் ஸ்மிதா, ஐ.ஆர்.சி.டி.எஸ். திட்ட மேலாளர் ஸ்டீபன், கிராம முக்கிய நிர்வாகிகள், கோயில் பூஜாரிகள், மத குருமார்கள், இளைஞர்கள் மன்றத்தினர் மற்றும் மகளிர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com