சர்வதேச யோகா தினம்: பள்ளி, கல்லூரிகளில் யோகா பயிற்சி முகாம்
By DIN | Published On : 22nd June 2019 04:11 AM | Last Updated : 22nd June 2019 04:11 AM | அ+அ அ- |

திருவள்ளூர் அருகே மாணவ, மாணவிகளுடன் பங்கேற்று யோகாசனம் செய்த ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ஏ.பி.எஸ். மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பங்கேற்று மாணவர்களுடன் அமர்ந்து யோகாசனம் செய்து உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
திருவள்ளூர் அருகே உள்ள தலக்காஞ்சேரியில் செயல்பட்டு வரும் ஏபிஎஸ் வித்யா மந்திர் பள்ளியில் உலக சமுதாய சேவா சங்கம், திருவள்ளூர் மண்டல அறக்கட்டளை இணைந்து சர்வதேச யோகாசன தின விழாவை வெள்ளிக்கிழமை கொண்டாடின. இந்த நிகழ்ச்சிக்கு ஏபிஎஸ் கல்விக் குழுமத்தின் செயலாளர் ரமேஷ் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுடன் ஆட்சியரும் பங்கேற்று தியானம் மற்றும் யோகாசனம் செய்து அனைவரையும் உற்சாகப்படுத்தினார். இதில், ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் யோகா நடனமாடி பார்வையாளர்களை அசத்தினர். வட்டாட்சியர் சீனிவாசன், யோகா மைய துணைத் தலைவர் மற்றும் துணைப் பேராசிரியர் ஜி.பாலசுப்பிரமணியம், மன வளக்கலை மண்டல துணைப் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், ஜி.பாலசுப்பிரமணியம், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருத்தணியில்....
திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற யோகப் பயிற்சியில் 1,300 மாணவிகள் கலந்துகொண்டனர்.
திருத்தணி அரசினர் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆறுமுக சுவாமி கோயில் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் முருக்கப்ப நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் யோகப் பயிற்சி நடந்தது.
யோகப் பயிற்சியை திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினர் பி.எம்.நரசிம்மன், திருத்தணி மாவட்டக் கல்வி அலுவலர் பழனிசேகர், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கேபிள் எம்.சுரேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாணவ, மாணவியர் பங்கேற்று யோகாசனம் மற்றும் பல்வேறு பயிற்சிகளைச் செய்து காண்பித்தனர். யோகப் பயிற்சி ஆசிரியர் பிரகாஷ் மற்றும் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.
அதே போல் திருத்தணி அரசினர் கலைக் கல்லுôரி மாணவர்கள் யோகா தினத்தைட்டி, பல்வேறு யோகாசனங்களைச் செய்து காண்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லுôரி பேராசிரியர் ஹேமநாதன் செய்திருந்தார்.
கும்மிடிப்பூண்டியில்....
கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக யோகா தின விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஐயப்பன் தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்மராவ், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், கீழ்முதலம்பேடு ஊராட்சி செயலாளர் சாமுவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ஏழாம் வகுப்பு மாணவி எம்.வினோதினி, கண்ணாடி டம்ளர்கள் மீது யோகாசனம் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். நிகழ்வில் சென்னை மணப்பாக்கம் ஹார்ட்புல்னெஸ் அமைப்பைச் சேர்ந்த வெங்ட் லட்சுமிநரசிம்மா, அருணகிரி செல்வராஜ், உஷா ஜெகன், அனுசுயா ஆகியோர் மாணவர்களுக்கு யோகப் பயிற்சியும், மனவளக் கலை பயிற்சியும் அளித்தனர். உதவி தலைமை ஆசிரியை புஷ்பலதா நன்றி கூறினார்.
கவரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை திரிபுரசுந்தரி தலைமை தாங்கினார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக யோகா ஆசிரியர் டி.ஜெயச்சந்திரன் பங்கேற்று மாணவர்கள் முன் யோகப் பயிற்சி குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்து யோகப் பயிற்சிகளை கற்றுத் தந்தார்.
பெருவாயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியர் ரூத் சம்பூர்ணம் இசபெல்லா தலைமையில் நடந்த யோகா தின விழாவில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார மேற்பார்வையாளர் நித்யானந்தம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பள்ளி மாணவர்கள், யோகாசன நிகழ்வுகளை செய்து காட்டினர்.
எளாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக யோகா தின விழாவில் ஹார்ட்புல்னெஸ் தியானம் குறித்து மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் பங்கேற்று யோகா தின சிறப்புரை ஆற்றினார்.
டி.ஜே.எஸ். பப்ளிக் பள்ளியில்....: பெருவாயல் டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு டி.ஜே.எஸ். கல்விக் குழுமத் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். தனியார் தொழிற்சாலை நிர்வாக மேலாளர் டி.ஏ.வர்கீஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
விழாவில் பள்ளி மாணவர்கள் பல்வேறு யோக பயிற்சிகளை செய்து காட்டினர். பள்ளி முதல்வர் சுகாதா தாஸ், துணை முதல்வர் ஜோதிமுருகன், டி.ஜே.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பிச்சைமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில்...
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள், ஆதரவற்றோர் மையங்கள், தனியார் தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் யோகா பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
அரசுப் பள்ளிகளில்...: படப்பையை அடுத்த செரப்பனஞ்சேரியில் இயங்கி வரும், ஸ்ரீநாகம்மாள் பொன்னப்பன் இயற்கை சிகிச்சை மையம் மற்றும் யோகா ஆராய்ச்சி மையத்தின் சார்பாக, படப்பை அரசினர்ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. யோகா ஆசிரியர்கள் பார்த்தசாரதி, நந்தகுமார் ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கினர்.
இதில், ஸ்ரீநாகம்மாள் பொன்னப்பன் இயற்கை சிகிச்சை மையம் மற்றும் யோகா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பொன். கணேசன், செரப்பனஞ்சேரி ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், தலைமையாசிரியர் (பொறுப்பு) செல்வி, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
படப்பை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கும், செரப்பனஞ்சேரி தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கும் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில்...: ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் யோகா முகாம் நடைபெற்றது.
இந்த மையத்தின் இயக்குநர் தௌதாங் கௌதாங் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இதில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகா ஆசிரியர் பாஸ்கரன் பயிற்சி வழங்கினார்.
முகாமில், மையத்தின் பதிவாளர் சந்திரமோகன், பேராசிரியர்கள் கோபிநாத், உடற்கல்வி பயிற்றுநர் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் மனவளக் கலை மன்ற தவமையத்தின் சார்பாக, மகாத்மா காந்தி ஆதரவற்றோர் பள்ளி, வெங்காடு, காட்டரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் வடகால் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஆகிய இடங்களில் சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதில், யோகா பயிற்சியாளர்கள் அனந்த ராமகிருஷ்ணன், சுரேஷ், பாஸ்கர், கலா ஆகியோர் பயிற்சி வழங்கினர்.
மாமல்லபுரத்தில்...
மத்திய, மாநில சுற்றுலாத் துறைகளின் சார்பில் கடற்கரைக் கோயில் மைதானம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாமல்லபுரம் நகர சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் தலைமை வகித்தார்.
இதில், பல்வேறு யோகாசன பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். மேலும், உடல் நலத்தைப் பேணிக் காப்பது, பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வது, தினசரி உணவு முறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
இதில், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்..: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில், சர்வதேச யோகா தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் உஷாசதாசிவன் தலைமை வகித்தார். யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ஆர்.தேவி வரவேற்றார். நிலைய மருத்துவ அதிகாரி வள்ளியரசி, சித்த மருத்துவர் புனிதா, தலைமை செவிலியர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.அய்யாசாமி பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் பல்வேறு யோகாசனப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
காஞ்சிபுரத்தில்...
காஞ்சிபுரத்திலுள்ள பள்ளிகள், தொண்டு நிறுவனங்களில் யோகா பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தை அடுத்த அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் தணிகையரசு தலைமையில், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் வீரமணி முன்னிலையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இதில், யோகாசனத்தின் நன்மைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, பத்மாசனம், சித்தாசனம், சர்வங்காசனம், ஹாலாசனம், மயூராசனம், தனுராசனம், புஜங்காசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.
பிரம்மகுமாரிகள்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்-ராஜயோக தியான நிலையம் சார்பில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பிரம்மகுமாரிகள் அமைப்பின் காஞ்சிபுரம் கிளை ஒருங்கிணைப்பாளர் அகிலா தலைமை வகித்தார்.
தலைமை அஞ்சலகத்தில்..: காஞ்சிபுரம் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பு அலுவலக வளாகத்தில், துணை அஞ்சலகக் கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில், அஞ்சல் நிலையத் தலைவர் சந்திரசேகர் முன்னிலையில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில், அஞ்சல ஊழியர்கள் பங்கேற்று யோகாசனங்கள் செய்தனர்.
சேவாலயா: சேவாலயா தொண்டு அமைப்பு சார்பில், சுங்குவார் சத்திரம், உத்தரமேரூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் சமுதாயக் கல்லூரிகளில் யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதில், மாணவர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு யோகா பயிற்றுநர் பாஸ்கரன் தலைமையில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நாள்தோறும் யோகாசனம் செய்வதால், உடல் நலம், மனம், அறிவு ஆகியவை மேம்படுதல், நோய்கள் அகலுதல், நல்லெண்ணங்கள் தோன்றுதல் உள்ளிட்ட யோகாசனத்தின் பலன்கள், செய்முறை, பெண்களுக்கான யோகா பயிற்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மதுராந்தகத்தில்...
மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் து. ப. வெங்கட பெருமாள் தலைமை வகித்தார்.இதில், என். சி. சி. மாணவர்கள் 62 பேர் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.
என். சி. சி. அலுவலர் சுப. ஜெயசீலன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மதிமோகன், உடற்கல்வி இயக்குநர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருங்குழி பேரூராட்சியில்...: கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற யோகா தின விழாவுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமை வகித்தார்.
இதில், அலுவலக ஊழியர்கள், சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி மாணவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வில்வராயநல்லூரில்...: வில்வராயநல்லூர் சுபம் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி மாணவர்கள் வெள்ளிக்கிழமை யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சிக்கு, சுபம் கல்விக் குழுமங்களின் தாளாளர் எஸ்.டி.மனோகர் குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் லீசா பிளாரன்ஸ் வரவேற்றார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர். பள்ளிச் செயலர் எம். அபய்குமார் நன்றி கூறினார்.
மேல்மருவத்தூரில்...: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பள்ளி குழுமங்களின் சார்பாக சர்வதேச யோகா விழிப்புணர்வு தினம் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆதிபராசக்தி உயர்நிலைப் பள்ளி, ஆதிபராசக்தி ஜி.பி. பப்ளிக் பள்ளி மற்றும் ஆதிபராசக்தி அன்னை இல்லம் ஆகியவற்றின் சார்பாக, பள்ளி மாணவ, மாணவியர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஆதிபராசக்தி பள்ளி குழுமங்களின் தாளாளர் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி விஜய ரகுநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.