அனுமதி பெறாத பள்ளிகளை மூட வலியுறுத்தல்
By DIN | Published On : 23rd June 2019 12:37 AM | Last Updated : 23rd June 2019 12:37 AM | அ+அ அ- |

திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை உடனே மூட வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் லட்சுமிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ரவி, மாவட்ட துணைச் செயலர் ரமேஷ், மகளிரணி நிர்வாகிகள் புஷ்பலதா, மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில பொதுச்செயலர் இரா.தாஸ் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் காரணமாக எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யவும், மாறுதல் உள்ளிட்ட அனைத்து செயல்களையும் கலந்தாய்வு நடைபெறும் முன்பு ரத்து செய்து, பதவி உயர்வு பாதிப்பில்லாமல் வழங்க வேண்டும்,.
மாறுதல் கலந்தாய்வு அரசாணை 218-இன் படி 1.6.2019-இல் 3 ஆண்டுகள் முடிந்திருத்தல் என்ற விதியை தளர்த்தி, ஏற்கெனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும், மேலும், இந்த மாவட்டத்தில் அனுமதி பெறாத பள்ளிகளை உடனே மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.