அடையாறு தடுப்பு வேலிகள் திட்டத்தை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

அடையாறு ஆற்றின் கரைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மண்ணிவாக்கம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அடையாறு ஆற்றின் கரைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மண்ணிவாக்கம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ்,  அடையாறு ஆற்றின் இரு கரைகளிலும், ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க, சுமார் 34 கி.மீ. தொலைவுக்கு ரூ. 58 கோடியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு ஜூலையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தார்.  
இந்த திட்டத்தின் மூலம், மண்ணிவாக்கம், வரதராஜபுரம்,  திருமுடிவாக்கம்,  இரண்டாம் கட்டளை, தரப்பாக்கம், கொளப்பாக்கம், கவுல்பஜார் ஆகிய பகுதிகளில் அடையாறு ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தொடங்கின. 
ஆனால், கான்கிரீட் தூண்கள் மட்டும் அமைக்கப்பட்ட நிலையில், பணிகள் முழுவதுமாக  கிடப்பில்  போடப்பட்டுள்ளன.  இதனால் அடையாறு ஆற்றின் கரைகளில் தற்போது ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அடையாறு ஆற்றின் கரையில் மண்ணிவாக்கத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலந்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் ஆற்றின் கரைகளில் தடுப்பு வேலிகளை அமைத்து, ஆற்று நீரில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com