மரக்கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 24th June 2019 06:38 AM | Last Updated : 24th June 2019 06:38 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் பெப்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நகர பஜாரில் மரக்கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.
இந்த அமைப்பின் சார்பில் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் ஜி.என்.டி. சாலையோரம் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்விற்கு அமைப்பின் தலைவர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். பெப்ஸ் அமைப்பைச் சேர்ந்த ரங்கபாஷ்யம், கமலநாதன், அசாருதீன், சுரேஷ்பாபு, ஜெயப்பிரகாஷ், மூர்த்தி, பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கல்பனா தத், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் டில்லிபாபு ஆகியோர் பங்கேற்று, மரக்கன்று நடும் நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து நகரின் ஜி.என்.டி. சாலையில் ரெட்டம்பேடு சாலை சந்திப்பு முதல் கார்ப்பரேஷன் வங்கி வரையிலான ஒன்றரை கி.மீ. தொலைவிற்கு இரு புறமும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவற்றைப் பாதுகாக்க மரக் கூண்டுகளும் வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, மரக்கன்றுகளுக்கு தினமும் நீரூற்றிப் பாதுகாத்து வளர்த்து, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை மரங்கள் நிறைந்த பசுமைப் பகுதியாக மாற்ற உள்ளதாகவும், இவ்வாறு நகர் முழுவதும் மரக்கன்றுகளை நட உள்ளதாகவும் பெப்ஸ் அமைப்பினர் தெரிவித்தனர்.