சுடச்சுட

  

  ஆசிரியரின் இட மாறுதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 26th June 2019 07:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்மிடிப்பூண்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியரை பணி இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களும், பொதுமக்களும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   கும்மிடிப்பூண்டி அருகே நத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 83 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் வளர்மதி உள்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், ஆங்கில ஆசிரியராக பாபு என்பவர் 2016-ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார். இவர், 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கற்பித்து வந்தார். இவர், மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிய முறைகளில் கற்பித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி நேரம் முடிந்தபின்பும் மாலை 6 மணி வரை வகுப்புகள் எடுத்து, மாணவர்களின் கல்வித் தரம் உயர முயற்சி மேற்கொண்டும் வந்தாராம். அதனால் அவர் மீது மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டது.  
   இந்நிலையில், பாபுவை ஜூன் 6-ஆம் தேதியன்று கல்வித் துறையினர் பணியிட மாற்றம் செய்தனர். இதுகுறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர், பணியிட மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என திருவள்ளூரில் உள்ள முதன்மைக் கல்வி அதிகாரிக்கு மனு அளித்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
  தகவல் அறிந்து அங்கு வந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் பூவராகவமூர்த்தி, முனிராஜசேகர் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து, பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர் ரவி பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர்களின் நலன் கருதியும், அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளும் வகையிலும் புதன்கிழமை முதல்  நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாபு தொடர்ந்து பணியாற்றுவார் எனவும், அவரது பணியிட மாறுதல் ரத்து செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.
  இதைக் கேட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் கல்வித் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai