ஊரக வேலைத் திட்ட அதிகாரியை கண்டித்து கிராமப் பெண்கள் சாலை மறியல்
By DIN | Published On : 02nd March 2019 03:11 AM | Last Updated : 02nd March 2019 03:11 AM | அ+அ அ- |

திருவள்ளூர் அருகே தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூலி வழங்காமல் தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை கிராமப் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கைவண்டூர் ஊராட்சியில் அம்பேத்கர் நகர், தொழுவாக்கம், குப்பம்மாசத்திரம், முல்லைநகர், மேளாகரம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒரு முறை தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராமவாசிகள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
அதன்படி குப்பம்மாசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த 100 பேர் இத்திட்டப் பணியில் வருகின்றனர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை பூண்டி ஏரியோரம் வேலையில் ஈடுபடுமாறு களப்பணியாளர் கூறியிருந்தார். அதன்பேரில் கிராமவாசிகள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த களப்பணியாளர் சரவணன் அங்கு வந்தார்.
பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் யார் உங்களை இங்கு வர சொன்னது ? என்று கேட்டாராம். அப்போது, கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்காதது குறித்து அவர்கள் கேட்டதற்கும் ஏளனமாகப் பேசியதோடு பெண்கள் என்றும் பாராமல் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கைவண்டூரில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து, வருவாய்த்துறை அதிகாரிகள், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கேடசன் மற்றும் போலீஸார் அங்கு வந்து, கிராமத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, பணித்தள மேற்பார்வையாளர் தங்களைத் தரக்குறைவாக பேசுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராமத்தினர் தெரிவித்தனர். அது தொடர்பாக கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாகவும், ஊதியம் விடுவிக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.