குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியல்
By DIN | Published On : 08th March 2019 04:26 AM | Last Updated : 08th March 2019 04:26 AM | அ+அ அ- |

திருத்தணியில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட 1-ஆவது வார்டில் உள்ள ஏரிக்கரை தெருவில் 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில், தெருக் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால், ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இன்றி வறண்டு விட்டது.
இதனால் கடந்த ஒரு மாதமாக டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த பத்து நாள்களுக்கு மேலாக டிராக்டரில் குடிநீர் விநியோகம் செய்யவதும் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, காலிக் குடங்களுடன் புறவழிச் சாலையில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த திருத்தணி காவல் உதவி ஆய்வாளர் சரவணன், நகராட்சிப் பொறியாளர் விஜயகாமராஜ் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பெண்களிடம் பேசி சமரசம் செய்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு, கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.