சுடச்சுட

  

  வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை

  By DIN  |   Published on : 16th March 2019 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை வாகனங்களில் குறிப்பிட்ட வழித்தடம் வழியாக பாதுகாப்பாகக் கொண்டு செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் (ஜிபிஎஸ்) வழிகாட்டும் கருவி பொருத்தி கணினி மூலம் கண்காணிக்க இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.  
  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,   ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆயுதம் தாங்கிய போலீஸாரின் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றிச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் வாகனங்களுக்கு அதற்கான வழித்தடமும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். 
  அந்த குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே அந்த வாகனங்கள் செல்ல வேண்டும். அவற்றைக் கண்காணிக்கும் வகையில் மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக அந்த வாகனங்களில் வழிகாட்டும் கருவி (ஜிபிஎஸ்) பொருத்தப்பட இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. 
  இதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியில் இருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு வழித்தட விவரம் கொண்ட பட்டியல் வழங்கப்படும்.  இதில் பெரும்பாலான வழித்தடங்கள் பல்வேறு கிராமங்களை உள்ளடக்கியதாக இருக்கும். குண்டும், குழியுமான சாலைகளைக் கடந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை ஏற்றிக் கொண்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருக்கும். 
  அதுபோன்ற சாலைகளில் பிரச்னையின்றி வாகனங்கள் வருகின்றனவா என்பதைக் கண்காணிக்கவே  ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இதை மாவட்டத் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் இருந்து கணினி மூலம் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  எதிர்பாராத வகையில் வாகனங்கள் பழுதாகி நிற்க வாய்ப்புள்ளது. இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கும் வகையில் கணினி மூலம் கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க உதவும் என்பதால் இக்கருவி ஒவ்வொரு வாகனத்திலும் பொருத்தப்பட உள்ளது.
  தேர்தல் நாளில் வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு வர எத்தனை வாகனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்ற விவரங்கள் தேர்தல் அலுவலர்கள் மூலம் அறிந்து கொள்ளப்படும். அதன்படி வாக்குப் பதிவுக்கு முதல் நாளில் இக்கருவியை அதற்கான குழுவினர் மூலம் வாகனங்களில் பொருத்த  நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai