பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை: ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர்கள் அளித்த வாக்கை உறுதி செய்யும் கருவியின்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர்கள் அளித்த வாக்கை உறுதி செய்யும் கருவியின்  செயல்பாட்டின் நம்பகத்தன்மை குறித்து வாக்காளர்கள் மத்தியில் 3583 வாக்குச்சாவடி நிலையங்களில்  விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாகவும், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்குச்சாவடிகள் தோறும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதில், மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மகேஸ்வரி ரவிகுமார் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திருவள்ளுர் மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இத்தொகுதிகளில் ஆண்கள்-16,05,908, பெண்கள்-16,28,089 மற்றும் இதர வாக்காளர்கள் -709 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 34 ஆயிரத்து 706 பேர் ஆகும்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த முகாம் கடந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 65,335 மனுக்கள் பெறப்பட்டு சேர்த்தல், நீக்கல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் மொத்தம் 55 துணை வாக்குச்சாவடி நிலையங்கள் உருவாக்கப்பட்டு, அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய அனுமதிக்காக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனால், இந்த மாவட்டத்தில் மொத்தம் 3,638 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கை உறுதிசெய்யும் கருவியின் செயல்பாட்டின் நம்பகத்தன்மையை வாக்காளர்கள் மத்தியில் 3,583 வாக்குச்சாவடி நிலையங்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
மேலும், திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமாக பெருமாள்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இதில் புகார்களை 1950 மற்றும் 18004258515 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட இ-ஸ்ண்ஞ்ண்ப் என்ற ஙர்க்ஷண்ப்ங் அல்ல் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த புகார்களை பொதுமக்கள் எளிதாக நேரடியாக பதிவு செய்யலாம். அதேபோல் தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்கவும் திருவள்ளூர் மாவட்டத்தில் 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 30 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்க திருவள்ளூர் மாவட்டத்தில் 10 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இத்தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுத் தேர்தல் மற்றும் பூந்தமல்லி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பணிகளும், கூடுதல் பணியாளர்களைக் கொண்டு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 9 வாக்குச்சாவடிகளும், எளிதில் பதற்றத்திற்குட்படக்கூடிய வாக்குச்சாவடிகளாக 159-ம் கண்டறியப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 31,93,802 ஆகும். பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 22,75,684. வாக்குப்பதிவு 71.25 சதவிகிதம். அதேபோல், மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவை அதிகப்படுத்தும் நோக்கத்தில் தீவிரமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவள்ளூர் சார் ஆட்சியருமான த.ரத்னா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் 
ஆர்.பாலாஜி, பூந்தமல்லி வட்டாட்சியர் புனிதவதி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com