வாக்குப் பதிவை அதிகரிக்க எரிவாயு உருளையில் ஒட்டு வில்லை மூலம் விழிப்புணர்வு: ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் எரிவாயு உருளைகளில் ஒட்டு வில்


திருவள்ளூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் எரிவாயு உருளைகளில் ஒட்டு வில்லை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயக்கத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈக்காடு கிராமத்தில் உள்ள தனியார் ஏஜென்சியில் இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில்  ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் பேசியது:
மக்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 இதைத்  தொடர்ந்து மகளிர் குழுக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மூலம் பல்வேறு  நிலைகளில் பேரணி, கோலப்போட்டி, இருசக்கர வாகனப் பேரணி, மினி மாரத்தான் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் ஏற்கெனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திருவள்ளூரில் தனியார் முகமையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் எரிவாயு உருளைகளில், வாக்களிப்பதை உறுதிசெய்யும் நோக்கில் ஒட்டும் வில்லைகள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இதுவரை 336 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதேபோல், உள்ளாட்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் எரிவாயு உருளைகளிலும், அதை ஏற்றிச் செல்லும் வாகனங்களிலும் விழிப்புணர்வு பதாகைகள் வைத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன. 
அதேபோல், கடந்த தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  
மேலும், மாற்றுத் திறனாளிகளை வாக்களிக்கச் செய்யும் நோக்கில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் சுவிதா என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்தச் செயலி மூலம் 3 நாள்களுக்கு முன்பாக அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சாய்வர்தினி, ஊரக வாழ்வாதாரத் திட்ட அலுவலர் ஜெயகுமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com