வேட்பு மனு தாக்கலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

மக்களவைத் தேர்தலுக்காக, வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குவதை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
வேட்பு மனு தாக்கலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்


மக்களவைத் தேர்தலுக்காக, வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குவதை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார். 
இது குறித்து அவர் கூறியது:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய 26-ஆம் தேதி கடைசி நாளாகும். அதைத் தொடர்ந்து, வரும் 27-ஆம் தேதி  வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 29-ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ்  பெறலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுப் பிரிவில் போட்டியிடுவோர் ரூ.25 ஆயிரமும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தனித் தொகுதியில் போட்டியிடுவோர் ரூ.12,500-ஐ வைப்புத் தொகையாகவும் செலுத்த வேண்டும்.
எனவே வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தயாராக உள்ளன. இதற்காக ஆட்சியர் அலுவலத்திற்கு வரும் 3 வழிகளிலும் 100 மீட்டருக்கு தடைக் கோடு அமைத்தல் மற்றும் பாதுகாப்புத் தடுப்புகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும், வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் எக்காரணம் கொண்டும் விதிமுறை மீறக்கூடாது. இதற்காக நுழைவு வாயில் முதல் அலுவலகம் வரை அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் தேர்தல் பிரிவு அலுவலகம், வேட்பாளர்களின் தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்க்கும் அறை, தேர்தல் பிரிவு அலுவலகம் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆட்சியர் அலுவலக அறையிலிருந்து கணினி மூலம் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது, வேட்பாளர், உடன் வருவோருக்கு 3 வாகனங்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் குறிப்பிட்ட இடம் வரை அனுமதிக்கப்படும். அதேபோல் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது, வேட்பாளருடன் 4 பேருக்கு அனுமதி அளிக்கப்படும். வேட்பு மனு படிவத்தை மிகவும் சரியான முறையில் நிரப்பி, சொத்து விவரப் பட்டியலை அளிப்பதற்கும், பணம் செலுத்தவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில்...
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என காஞ்சிபுரம் ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மார்ச் 19 -ஆம் தேதி முதல் மார்ச் 26 -ஆம் தேதி வரை (மார்ச் 23, 24 ஆகிய நாள்களைத் தவிர) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்யலாம். மேலும், காஞ்சிபுரம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் குறிப்பிட்ட நாள்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும்.  
ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதன்மை உதவி தேர்தல் அலுவலரிடம் குறிப்பிட்ட நாள்களில் காலை  11மணி முதல்  மாலை 3 மணிவரை வேட்பு மனுக்கள் பெறப்படும். 
திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதி:  திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் குறிப்பிட்ட அதே நாள்களில் (மார்ச் 19-26)  திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளரிடம் தாக்கல் செய்யலாம். 
வேட்பு மனு தாக்கல் செய்பவர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருந்தால்,  முன்மொழிவதற்கு ஒருவர் மட்டும் போதுமானது.  முன்மொழிபவர் கையொப்பம் அவசியமானது.  அங்கீகரிக்கப்படாத அல்லது பதிவு செய்யப்பட்ட கட்சியை சார்ந்த வேட்பாளராகவோ அல்லது சுயேட்சை வேட்பாளராக இருப்பின் 10 நபர்கள் முன்மொழிபவர்களாக இருத்தல் வேண்டும்.   குறிப்பிட்ட 10 நபர்களும் வேட்புமனுவில் கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.  
இணைக்கவேண்டிய ஆவணங்கள்: படிவம் 26 -இன்படி உறுதிமொழி குறைந்த பட்சம் ரூ.20 மதிப்புள்ள முத்திரைத்தாளில் தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதில் உள்ள அனைத்து பகுதியிலும் (காலங்களும்) விடுதல் ஏதுமின்றி முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் வைப்புத்தொகை ரூ. 25,000,  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ.12, 500-ஐ செலுத்த வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com