திருத்தணி அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், விஜய்கார்த்திக், பஷீர்.
திருத்தணி அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், விஜய்கார்த்திக், பஷீர்.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: திருத்தணி அரசு மருத்துவர்கள் சாதனை

திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் முதன் முறையாக, 45 வயது பெண் மற்றும், 70 வயது முதியவர் என இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை


திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் முதன் முறையாக, 45 வயது பெண் மற்றும், 70 வயது முதியவர் என இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இந்த மருத்துவமனையில் இதுவரை மூட்டு எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் இல்லை என்பதால், நோயாளிகள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஜனகராஜகுப்பம் பகுதியைச் சேர்ந்த செல்வதாஸின் மனைவி குமாரி(45) தனது வீட்டில் கடந்த மாதம் 26ஆம் தேதி வழுக்கி விழுந்துவிட்டார். இதில் அவருக்கு இடுப்பு மூட்டு எலும்பு உடைந்து, நடக்க முடியாமல் தவித்தார். கூலித் தொழிலாளியான அவர், கடந்த 3ஆம் தேதி திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த எலும்பு மருத்துவர்கள் விஜய்கார்த்திக் மற்றும் பஷீர் ஆகியோர் மூட்டு மாற்று சிகிச்சை செய்யத் தீர்மானித்தனர். அதன்படி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் தயாளனின் உத்தரவின்பேரில், திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஹேமாவதி மேற்பார்வையில், மருத்துவர்கள் விஜய்கார்த்திக், பஷீர், மயக்க மருந்து நிபுணர் விவேகானந்தன் உள்பட 9 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் கடந்த 6ஆம் தேதி திருத்தணி அரசு மருத்துவமனையில் குமாரிக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து தற்போது குமாரி நலமுடன் உள்ளார்.
மற்றொரு அறுவை சிகிச்சை: இதனிடையே, திருத்தணி நேரு நகரைச் சேர்ந்த சுப்பிரமணி(70) என்பவர் தனது வீட்டில் அண்மையில் கீழே விழுந்ததில், இடது கால் உடைந்தது.
 தொடர்ந்து அவர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கும் அதே மருத்துவக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை 4 மணிநேரம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவரும் நலமாக உள்ளார்.
இது குறித்து மருத்துவர் விஜய் கார்த்திக் கூறும்போது, குமாரி மற்றும் சுப்பிரமணியை பரிசோதித்தபோது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தால் நடக்க முடியும் எனக் கருதி, அவரது உடலில் தேவையான அளவுக்கு ரத்தம் ஏற்றி உடல் தகுதியான பின் அறுவை சிகிச்சை செய்தோம். தற்போது குமாரி எழுந்து வழக்கம் போல் நடக்கிறார். சுப்பிரமணி ஒரு வாரத்தில் நடப்பார். திருத்தணி அரசு மருத்துவமனையில் இரண்டு பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல் தடவை என்றார்.
இது குறித்து திருத்தணி அரசு தலைமை மருத்துவர் ஹேமாவதி கூறும்போது, திருத்தணி அரசு மருத்துவமனையில் முதன் முதலாக இம்மாதம்தான் 2 பேருக்கு மாற்று மூட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் வர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com