Enable Javscript for better performance
தேர்தல் விழிப்புணர்வு: பிரசார வாகனம், மனிதச் சங்கிலி- Dinamani

சுடச்சுட

    
    open

    எல்.இ.டி. அகன்ற திரையுடன் கூடிய விழிப்புணர்வுப் பிரசார வாகனத்தை தொடங்கி வைத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்.


    திருவள்ளூர் மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிப்பது,  பதிவு செய்த வாக்கை சரிபார்க்கும் இயந்திரம் குறித்த விழிப்புணர்வுப் பிரசார வாகனத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.   
     திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்கச் செய்யும் நோக்கில், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, இதை வலியுறுத்தும் வகையில், மாணவ, மாணவியர், மகளிர் குழுக்கள் என ஒவ்வொரு துறை சார்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் குறித்து எல்.இ.டி. திரை மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடமாடும் வாகனத்தை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
     நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், தேர்தல் பார்வையாளர் சுரேந்திரகுமார் ஆகியோர் பங்கேற்று, பிரசார வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இந்த எல்.இ.டி. அகன்ற திரையில், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், நாம்  சரியான வேட்பாளருக்கு வாக்கு அளித்துள்ளாமோ என்பதை சரிபார்க்கும் இயந்திரம் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட உள்ளது.
     இந்த நடமாடும் வாகனம் மூலம், பொது மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், பஜார் வீதி மற்றும் ரயில் நிலையம் பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
     இதில், தமிழ்நாடு மகளிர் வாழ்வாதார திட்ட இயக்குநர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகராட்சி மற்றும் தேர்தல் பிரிவு அலுவலக அதிகாரிகள் செய்திருந்தனர்.
    காஞ்சிபுரத்தில்...
     மக்களவைத் தேர்தலையொட்டி காஞ்சிபுரம், வாலாஜாபாத் பகுதிகளில் மனிதச் சங்கிலி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
    மக்களவைத் தேர்தல் மற்றும்  பேரவை இடைத்தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம், இந்திராகாந்தி சாலையில் உள்ள அண்ணா அரங்கம் முன் மனிதச் சங்கிலி பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்தார். சார்-ஆட்சியர் சரவணன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசராவ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
    தொடர்ந்து, தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவியர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேபோல், வாலாஜாபாத் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சியில் வட்டாட்சியர் கோடீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சிவகலைச்செல்வன் முன்னிலையில் பொதுமக்கள் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai