குடிநீர் விநியோகம் குறித்து புகாரா?

கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியர்


கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.  
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2018) வடகிழக்குப் பருவமழை 42.70 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இதனால், கோடைக்காலமான தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க முன்கூட்டியே செயல்திட்ட அறிக்கையைத் தயார் செய்வதற்காக, பெரிதும் பாதிக்கப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, ஒவ்வொரு பகுதியாக கள ஆய்வு செய்யப்பட்டு, சீரான வகையில் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக கோடையில் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க ஏதுவாக ஊரகப் பகுதிகளில் முன்கூட்டியே 156 புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், ஏற்கெனவே இருக்கும் 79 ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்துதல், 128 ஆழ்துளைக் கிணறுகளை சுத்தம் செய்தல், 177 புதிய குழாய்களைப் பதித்தல் மற்றும் குழாய் விரிவாக்கம் செய்தல் போன்ற பல்வேறு பணிகள் மும்முரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன.  அதேபோல், எதிர்வரும் கோடையில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு, அப்பகுதிகளில் குடிநீரை தடையின்றி விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர் ஆதாரம் இருக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு புதிய ஆழ்துளைக் கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன. மின்மோட்டார் பழுது, மின் அழுத்தம் குறைவு காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகளில், குடிநீர் லாரி மற்றும் டிராக்டர் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், அன்றாடம் குடிநீர் விநியோகம் மேற்கொள்வதை மாவட்ட அளவில் நாள்தோறும் அறிக்கைகள் பெறப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. குடிநீர் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகின்றன. இதில் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களைப் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு அறை தொடங்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசி எண்கள் - 044-27666746, 044-27664177, கட்டணமில்லா தொலைபேசி எண்-1077 ஆகியவற்றில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com