800 கிலோ கடல் மண்புழு பறிமுதல்: இருவர் கைது
By DIN | Published On : 15th May 2019 04:04 AM | Last Updated : 15th May 2019 04:04 AM | அ+அ அ- |

ஆந்திர மாநிலத்துக்குக் கடத்தவிருந்த 800 கிலோ கடல் மண் புழுக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை கைது செய்தனர்.
தமிழகத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலத்துக்கு கடல் மண் புழு கடத்தப்படுவதாக, கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கல்பனா தத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் குமரன் தலைமையில் போலீஸார் எளாவூரை அடுத்த ஏழுகிணறு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே சென்ற காரை சோதனையிட்ட போது, அந்த காரில் கடல் மண் புழுக்கள் தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்பட்டு, கடத்தப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து, மண் புழுக்களை பறிமுதல் செய்த போலீஸார், காரில் இருந்த இருவரை கைது செய்து, ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (34), சசி (21) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் எண்ணூரில் இருந்து ஆந்திர மாநிலம், நெல்லூருக்கு அந்த கடல் மண் புழுக்களை கடத்திச் செல்ல இருந்ததும், அங்கு இறால் பண்ணைகளை நடத்துபவர்களுக்கு இந்த மண் புழுக்களை விற்க இருந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மண் புழுக்களின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.
இதுகுறித்து, வினோத்குமார், சசி ஆகியோரிடம் ஆரம்பாக்கம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.