குடிநீர் தேடி விவசாய நிலங்களுக்குச் செல்லும் மாம்பாக்கம் கிராம மக்கள்

திருத்தணி அருகே உள்ள மாம்பாக்க சத்திரம், மாம்பாக்கம் கிராம பொதுமக்கள் குடிநீர் தேடி விவசாய நிலங்களுக்குச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நிரந்தரத் தீர்வு
குடிநீர் தேடி விவசாய நிலங்களுக்குச் செல்லும் மாம்பாக்கம் கிராம மக்கள்

திருத்தணி அருகே உள்ள மாம்பாக்க சத்திரம், மாம்பாக்கம் கிராம பொதுமக்கள் குடிநீர் தேடி விவசாய நிலங்களுக்குச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருவமழை பொய்த்துப்போனதால் திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுகாக்களில் உள்ள ஏரிகள், கிணறுகள், ஆழ்துளைக்  கிணறுகள் வற்றிவிட்டன. இந்நிலையில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து பல கிராமங்களில் குடிநீருக்காக பல கி.மீ. தொலைவு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திருத்தணி ஒன்றியத்தில், மாம்பாக்கம் ஊராட்சியில் மாம்பாக்கசத்திரம், மாம்பாக்கம், சத்திரம் காலனி ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக ஆழ்துளைக் கிணறுகளில் நீர் சுரப்பு தடைபட்டுள்ளது.
இதனால் பொது மக்களுக்குத் தேவையான குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக நீண்ட தொலைவில் உள்ள விவசாய நிலங்களைத் தேடிச் செல்கின்றனர்.
இதுகுறித்து மாம்பாக்கம் கிராம பொதுமக்கள் கூறியது:
எங்கள் ஊருக்கு குடிநீர் வேண்டி முதலில் ஊராட்சி மன்றத் தலைவரிடமும் ஒன்றிய நிர்வாக அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்தும், குடிநீர் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த நாங்கள், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் செய்தோம். அப்போது எங்கள் பகுதிக்கு நிரந்தரமாக குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
ஆனால் தற்போது வரை குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக கால்நடைகளை வளர்க்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தண்ணீருக்காக சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள வயல் வெளிக்குச் சென்று, அங்கு குழாய்களில் வரும் தண்ணீரை  எடுத்து வந்து, அதைப் பயன்படுத்தி வருகிறோம்.  அப்படி தண்ணீர் எடுத்துச் செல்லும்போது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. வயது முதிர்ந்தவர்கள் விவசாய நில வரப்புகளில் செல்லும்போது தடுக்கி விழுந்து காயத்துடன் திரும்புகின்றனர். தற்போது விவசாயிகள் தான் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனர் என்றனர். 
 எனவே பாதிக்கப்பட்ட மாம்பாக்கசத்திரம், மாம்பாக்கம் கிராம மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, உடனடியாக குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com