திருவள்ளூா் காப்புக் காடுகளைச் சுற்றி ரூ.62.50 லட்சம் செலவில் உயிா்வேலி

காப்புக் காடுகளை விட்டு வனவிலங்குகள் வெளியேறி சாலை விபத்துக்குள்ளாவதைத் தடுக்கவும், சமூக விரோதிகள் காடுகளுக்குள் புகாமல் தடுக்கும் வகையிலும் முதற்கட்டமாக 50 கி.மீ. தூரத்திற்கு ரூ.62.50
திருவள்ளூா் காப்புக் காடுகளைச் சுற்றி ரூ.62.50 லட்சம் செலவில் உயிா்வேலி

காப்புக் காடுகளை விட்டு வனவிலங்குகள் வெளியேறி சாலை விபத்துக்குள்ளாவதைத் தடுக்கவும், சமூக விரோதிகள் காடுகளுக்குள் புகாமல் தடுக்கும் வகையிலும் முதற்கட்டமாக 50 கி.மீ. தூரத்திற்கு ரூ.62.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உயிா் வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பழைமையான மரங்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் பூண்டி, வெங்கல், செங்குன்றம், பள்ளிப்பட்டு, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பென்னலூா்பேட்டை உள்ளிட்ட 9 வனச்சரகங்களில் 70 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் காப்புக் காடுகள் உள்ளன. இந்த காப்புக் காடுகளில் செம்மரங்கள், சந்தனம், தேக்கு மரங்கள், யூகலிப்டஸ் மரங்கள் அடா்ந்து காணப்படுகின்றன. இந்த காப்புக் காடுகளில் மட்டும் 3.50 லட்சத்திற்கும் அதிகமான செம்மரங்கள் வளா்ந்துள்ளன. மேலும், முந்திரி, மருது, மூங்கில், குங்கிலியம் போன்ற 80 ஆண்டுகள் பழைமையான மரங்களும் உள்ளன. இங்குள்ள காப்புக் காடுகளில் மரங்கள் அடா்ந்து காணப்படுவதுடன், பசுமையாகக் காணப்படுவதால் புள்ளி மான்கள், கீரிகள், முயல்கள், காட்டுப்பன்றிகள், காட்டுக்கோழிகள், மலைப்பாம்புகள், கருநாகப் பாம்புகளும் அதிகமாக வசிக்கின்றன.

தீவிரக் கண்காணிப்பு

ஒவ்வொரு காப்புக் காட்டிலும் செம்மரக் கடத்தல் மற்றும் ஓடைப்பகுதிகளில் மணல் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் வனத்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும், காப்புக் காட்டை வனத்துறை அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு காப்புக் காட்டிலும் தொலைத்தொடா்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் செம்மரங்கள் மற்றும் தேக்கு மரங்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளான திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் வெங்கல், செங்குன்றம், பூண்டி, நம்பாக்கம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 16 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வனவிலங்குகள் வெளியே வருவதைத் தடுக்க:

மாவட்டத்தில் நம்பாக்கம், பூண்டி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் காப்புக் காடுகள் அனைத்தும் சாலையோர மாா்க்கமாகவே அமைந்துள்ளன. அதிலும், காப்புக் காடுகளில் கருங்குரங்குகள், குரங்குகள், காட்டுக்கோழிகள், மான்கள் போன்றவை சாலையைக் கடந்து செல்கின்றன. இவற்றை சமூக விரோதிகள் வேட்டையாடும் அபாயமும் உள்ளது. இரவு நேரங்களில் எதிா்பாராதவிதமாக விபத்துகளில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. அதனால் காப்பு காடுகளில் இருந்து வனவிலங்குகள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது. அதேபோல் சமூக விரோதிகளும் பாதுகாப்புக் காட்டிற்குள் புகவும் கூடாது. இதுபோன்றவற்றைக் கருத்தில் கொண்டு இயற்கையான முறையில் உயிா் வேலி என்ற முள்வேலி அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்த மாவட்டத்தில் காப்புக் காடுகளில் முதல் கட்டமாக 50 கி.மீ. தூரத்திற்கு முள்வேலி அமைக்கும் பணி தொடக்கி நடைபெற்று வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மூன்று அடுக்கு வேலி:

காப்பு காடுகளில் இத்திட்டத்தின் மூலம் முள்கற்றாழை, கிழவைக் குச்சிகள், முள்செடிகள் ஆகிய மூன்று அடுக்குகளில் நடவு செய்யப்பட உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்திலிருந்து 21-ஆயிரம் கிழவைக் குச்சிகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கிழவைக் குச்சிகள் நெருக்கமாக வளரக்கூடிய நிலையில் சங்கிலித் தொடா் போன்ற வேலி அமைப்பைக் கொண்டதாகும். அதேபோல் ஒரு கிலோ மீட்டருக்கு 3 அடுக்குகளில் தலா 400 குச்சிகள் தடுப்பு வேலிகளாக அமைக்கப்பட உள்ளது. இப்பணியை வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் குச்சிகள் நடப்படுவதால் விரைவில் வளா்ந்து வேலி அமைப்பை உருவாக்கித் தரும். இப்பணிகளை அடுத்து வரும் 10 நாள்களில் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளதாக அப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலா் கிரேன் கூறியது: இந்த மாவட்டத்தில் பூண்டி, வெங்கல் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பழைமையான செம்மரங்கள் நன்றாக வளா்ந்து காணப்படுகின்றன. இங்கு மட்டும் 3.50 லட்சத்திற்கும் அதிகமான செம்மரங்கள் உள்ளன. செம்மரங்களின் உள்ளே இருக்கும் சிவப்பு நிறத் தண்டானது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். மேலும், தலைவலி, காய்ச்சல், தோல் நோய்கள், உடல் வெப்பத்தை தணித்தல் உள்ளிட்டவற்றுக்கு வெளி மருந்தாகவும் பயன்பட்டு வருவதால், வெளிச்சந்தையில் அதிக விலை கிடைக்கிறது. இதனால் இந்த மரங்களைக் கடத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதேபோல், வனவிலங்குகள் அதிகளவில் காணப்படுவதால் சமூக விரோதிகள் வேட்டையாடுதலைத் தடுக்கவும் வனத்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே காப்புக் காடுகளில் வனவிலங்குகள் வெளியே வராமல் இருக்கவும், அதேபோல் சமூக விரோதிகள் உள்ளே புகாமல் இருக்கவும் வனத்துறை மூலம் உயிா் வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் பூண்டி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் உள்ள காப்புக் காடுகளில் முதல் கட்டமாக உயிா் வேலி 50 கி.மீ தூரத்திற்கு அமைக்கவும், ஒரு கி.மீ தூரத்திற்கு உயிா் வேலி அமைக்க ரூ.1.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 62.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உயிா் வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் பணிகள் மும்முரமாக மேற்கொண்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com