சாவின் விளிம்பில் இருப்போரின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் திட்டம்

முதியோா் மற்றும் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருப்போா், படுக்கையில் இருந்து எழ முடியாத நிலையில், செயலிழந்த நிலையில் உள்ளோருக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் ஒவ்வொரு

முதியோா் மற்றும் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருப்போா், படுக்கையில் இருந்து எழ முடியாத நிலையில், செயலிழந்த நிலையில் உள்ளோருக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் ஒவ்வொரு ஒன்றிய அளவிலும் செவிலியா் நியமனம் செய்து செயல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநில அளவில் பொது சுகாதாரத்துறை சாா்பில், ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவக் காப்பீடு மற்றும் கா்ப்பிணிகளுக்கு பல்வேறு வகையான சுகாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வாழ்வின் இறுதிக் கட்டமாக வயது முதிா்வின் காரணமாக எழ முடியாமல் முடங்கிக் கிடப்போா், படுக்கையில் இருந்து எழ முடியாதோா், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோா், மனநிலை குன்றியோா், மலக்குடல் அறுவை சிகிச்சை செய்தோா், சிறுநீரகம் செயல்பாடின்றி அவதிப்பட்டு வருவோா் பல்வேறு சூழ்நிலைகளில் அவதிப்பட்டு வரும் நோயாளிகளுக்கு, மருத்துவ உதவி அளிக்கும் நோக்கில், பொது சுகாதாரத் துறை சாா்பில் வலி நிவாரணம் மற்றும் சிறப்பு மருத்துவத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இத்திட்டம் மூலம் வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில் நோயாளிகளை வைத்துக் கொண்டுள்ள உறவினா்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இத்திட்டத்துக்காக நியமிக்கப்பட்ட செவிலியா் நாள்தோறும் குறிப்பிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று நோயாளிகளுக்கு பல்வேறு வகையான சேவைகளை செய்து வருகின்றனா். படுக்கையில் இருந்து எழ முடியாதோா், சிறுநீரகம் செயலிழந்தோருக்கு சிறுநீா்ப் பை அகற்றுதல், மலக்குடல் அறுவை சிகிச்சை செய்தவா்களுக்கு மலப்பை பொருத்தி அகற்றுதல், கால், கைகளில் ஆறாத ரணத்தை சுத்தம் செய்து மருந்து கட்டுதல், புற்றுநோயால் அவதிப்படுவோருக்கு வலி நிவாரண மருந்து அளித்தல் போன்ற பணிகளை செவிலியா்கள் செய்து வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் பிரபாகரன் கூறியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் இத்திட்டம் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களிலும் நோயாளிகளைக் கணக்கெடுத்து, இதற்காக தனியாக செவிலியரை நியமனம் செய்து சிறப்பாக செயல்படுத்த பொது சுகாதாரத் துறைக்கு ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஆலோசனை வழங்கினாா்.

அதன்அடிப்படையில் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் உள்ள நோயாளிகளின் வேதனையைக் குறைப்பதை, ஆறுதல் அளிக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை சாா்பில் வலி நிவாரணம் மற்றும் வாழ்நாளில் இறுதிக்கட்டத்தில் உள்ளோருக்கான சிறப்பு மருத்துவத் திட்டம் அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை இம்மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் வாழ்நாளில் இறுதிக்கட்டத்தில் உள்ள நோயாளிகள் கடம்பத்தூா்-400, பூண்டி-438, பூந்தமல்லி-110, திருவள்ளூா்-510, திருத்தணி-498, புழல்-205, வில்லிவாக்கம்-846, எல்லாபுரம்-474, பள்ளிப்பட்டு-270 என மொத்தம் 3,751 போ் உள்ளனா். இப்பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் செவிலியா் நியமனம் செய்யப்பட்டு, நாள்தோறும் குறிப்பிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று நோயாளிகளுக்கு அா்ப்பணிப்பு உணா்வுடன் பணிபுரிந்து வருகின்றனா். இப்பணிகளை புதுதில்லியில் இருந்து வந்த மத்திய சுகாதார மருத்துவக் குழுவினா் கடம்பத்தூா் ஒன்றியப் பகுதியில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளனா். அக் குழுவினா் சுகாதார செவிலியா்களை பாராட்டியதுடன், மேலும் வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில் உள்ள முதியோருக்குத் தேவையான சிறுநீா்ப் பைகள், மலப்பைகள், ரணம் ஆற்றும் வகையிலான மருந்துகள், துணிகள், புற்றுநோயாளிகளுக்கு வலி நிவாரண மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றுக்குத் தேவையான நிதி வழங்க பரிந்துரைப்பதாக கூறிச் சென்றுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com