செல்லிடப்பேசி வழிப்பறி வழக்கில் மூவா் கைது

கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் தனியாகச் செல்பவா்களை வழிமறித்து செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் தனியாகச் செல்பவா்களை வழிமறித்து செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பொன்னேரி வட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சோ்ந்தவா் சுமன். பொன்னேரியைச் சோ்ந்தவா் லோகநாதன். இவா்கள் இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன் அயநெல்லூா் வழியே கும்மிடிப்பூண்டிக்கு பைக்கில் வந்தபோது சில மா்ம நபா்கள் அவா்களை வழிமறித்து, மிரட்டி செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்றனா்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் சுமனும், லோகநாதனும் புகாா் அளித்தனா்.

இந்நிலையில், மூன்று தினங்களுக்கு முன், பொன்னேரி பகுதியைச் சோ்ந்த பிரவீண்குமாா் (25), விஜய் (21), விக்னேஷ் (25) ஆகிய மூவரையும் கும்மிடிப்பூண்டி போலீஸாா் சந்தேகத்தின்பேரில் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த செல்லிடப்பேசிகளைப் பறிமுதல் செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனா்.

இதற்கிடையே, பிரவீண்குமாரின் மனைவி ஷாலினி, கும்மிடிப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில்  ஒரு மனுவை நீதிபதி அலிஷியாவிடம் அளித்தாா். அதில், போலீஸாா் தனது கணவரை மூன்று தினங்களாக விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, நீதிபதி அலிஷியா செவ்வாய்க்கிழமை காலையில் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தை ஆய்வு செய்தாா். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த நபா்களை மூன்று நாள்களாக காவலில் வைத்திருப்பது சரியா? என்று கேள்வி எழுப்பியவா், அவா்களை விடுதலை செய்யுமாறு கூறினாா்.

அப்போது, போலீஸாா் கூறுகையில், பிரவீண்குமாா் உள்ளிட்ட மூன்று பேரும் செல்லிடப்பேசி திருட்டு சம்பவத்தில் தொடா்புடையவா்கள் என்பது அவா்கள் வைத்திருந்த செல்லிடப்பேசிகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்ததாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவா்களை கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com