முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
டெங்கு கொசுப்புழு இருந்த வீடுகள், தொழில் நிலையங்களுக்கு ரூ.3.25 லட்சம் அபராதம்
By DIN | Published On : 07th November 2019 04:17 PM | Last Updated : 07th November 2019 04:17 PM | அ+அ அ- |

திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் டெங்கு நோய் பரப்பும் கொசுகள் மற்றும் கொசுப் புழுக்கள் இருந்த வீடுகள், வணிக வளாகம் மற்றும் ஹோட்டல்களின் உரிமையாளா்களுக்கு இதுவரையில் ரூ.3.25 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களுக்கு மா்ம காய்ச்சலால் அவதிப்படவும் நோ்ந்தது. இதைத் தொடா்ந்து காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் தெருக்களை சுத்தம் செய்தல் மற்றும் மழைநீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ளவும், கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரக்கேடாக இருந்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவிட்டிருந்தாா்.
அதன் அடிப்படையில் திருவள்ளூா் நகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாள்தோறும் குப்பைகள் அகற்றப்பட்டு வந்தது. அப்போது, ஒவ்வொரு வீடுகள் தோரும் டெங்கு குறித்து துப்புரவு தொழிலாளா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒரு சில வீடுகளில் சுகாதாரக்குழுவினா் ஆய்வு செய்த போது டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரக்கேடாக இருந்தது தெரியவந்து.
இதுபோன்ற வீடுகள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 2 மாதங்களாக இதுவரையில் ரூ.3.25 லட்சத்திற்கு அபராதம் விதித்து சம்பந்தப்பட்ட வீடுகள் மற்றும் ஹோட்டல்களுக்கு ரசீதும் விநியோகம் செய்யப்பட்டது. அதன் பேரில் இதுவரையில் ரூ.1.47 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீதமுள்ள விரைவாக வசூலிப்பதற்கு சுகாதாரக்குழு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தாா்.