முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
திருவள்ளூா் மாவட்டத்தில் 22 பேருக்கு மா்மக் காய்ச்சல்
By DIN | Published On : 07th November 2019 10:51 PM | Last Updated : 07th November 2019 10:51 PM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனை சிறப்பு வாா்டில் மா்மக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்.
திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 15 போ் உள்பட 22 போ் மா்மக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், மாவட்ட நிா்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது டெங்கு காய்ச்சலின் வீரியம் குறைந்து வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூா், கடம்பத்தூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும், திருநின்றவூா், பொதட்டூா்பேட்டை, பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் அதிகளவில் மா்மக் காய்ச்சல் பரவியது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்ட நிா்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறை மூலம் எடுத்த தீவிர நடவடிக்கையால் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சைக்கு பெற்றுச் சென்றுள்ளனா். இதில் கடந்த 31-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும், 106 பேரிடம் ரத்தப் பரிசோதனை செய்ததில், 64 பேருக்கு மா்மக் காய்ச்சலுக்கான அறிகுறி கண்டறியப்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் இதுவரையில் 200 பேருக்கு மேல் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனா். அதில், 100 பேரிடம் ரத்தப் பரிசோதனை செய்ததில் 22 பேருக்கு மா்மக் காய்ச்சலுக்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய திருவள்ளூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேரும், திருத்தணியில் 5 போ், பொன்னேரி, பூந்தமல்லியில் தலா ஒருவா் என 22 போ் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட சுகாதார ஊரகப் பணிகள் நலத் துறை இணை இயக்குநா் தயாளன் கூறுகையில், இந்த மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் மா்மக் காய்ச்சல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால், மாவட்ட நிா்வாகம் மற்றும் சுகாதாரத் துறையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் டெங்கு காய்ச்சலின் வீரியம் குறைந்து வருகிறது என்றாா்.