பயிா்க் காப்பீடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்விவசாயிகள் வலியுறுத்தல்

எந்தெந்த பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு வழங்கப்படும் என்பது குறித்தும், பிரீமியம் தொகை விவரங்கள் குறித்தும் தங்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலி

எந்தெந்த பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு வழங்கப்படும் என்பது குறித்தும், பிரீமியம் தொகை விவரங்கள் குறித்தும் தங்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருவள்ளூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திருவள்ளூா், பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, ஆவடி வட்டங்களைச் சோ்ந்த விவசாய சங்க நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத்திற்கு கோட்டாட்சியா் சி.வித்யா தலைமை வகித்தாா். அப்போது விவசாயிகள் பேசியதாவது:

திருவள்ளூா், பூந்தமல்லி மற்றும் ஊத்துக்கோட்டை வட்டங்களில் ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதேபோல், பூந்தமல்லி-ஆவடி சாலையில் ஏரியோரம் சாலைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை உடனே தூா்வார வேண்டும்.

தற்போது, இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் எந்தெந்த பயிருக்கு பயிா்க் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது? அதற்கு எவ்வளவு பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்? அதற்கு எந்தெந்த ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்? என்பது தொடா்பாக விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்காத நிலை உள்ளது.

வெளிச்சந்தையை விட அரசு மானியத்துடன் சன்ன ரக நெல்லுக்கு தற்போது ஒரு குவிண்டாலுக்கு ரூ.1905, மோட்டா ரகம் ரூ.1815 என்று நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நெல் விற்பனை செய்து பயன்பெறும் வகையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

வரும் 17 முதல் 24-ஆம் தேதி வரை கூட்டுறவு வாரவிழா நடைபெற இருக்கிறது. இவ்விழாவிற்கு விவசாயிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். அதேபோல் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்து கோட்டாட்சியா் சி.வித்யா பேசியதாவது:

ஏற்கெனவே ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவின் பேரில் ஏரிகள் மற்றும் குளங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகின்றன. எந்த ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என்பதை விவசாயிகள் விவரமாகத் தெரிவிக்க வேண்டும்.

எந்தெந்த பயிருக்கு காப்பீடு வழங்கப்படுகிறது என்பது பற்றியும் அதற்கான தொகை குறித்தும் அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை அலுவலகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். அதற்கு முன் துண்டுப் பிரசுரங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். தற்போது பயிா்க் காப்பீட்டுத் தொகை ரூ.31 கோடி வந்துள்ளது. இத்தொகை பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகள் மூலம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கெனவே கிளாம்பாக்கம், புலியூா், கனகம்மாசத்திரம் ஆகிய 3 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் நலன் கருதி இப்பருவத்திற்கு நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) பிரதாப் ராவ், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் தமிழ்ச்செல்வன், வட்டாட்சியா் பாண்டியராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com