Enable Javscript for better performance
‘தோழி’ திட்டம் மூலம் சிறுமிகளைப் பாதுகாக்க வேண்டும்: முன்னாள் டிஜிபி கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன்- Dinamani

சுடச்சுட

  

  ‘தோழி’ திட்டம் மூலம் சிறுமிகளைப் பாதுகாக்க வேண்டும்: முன்னாள் டிஜிபி கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன்

  By DIN  |   Published on : 09th November 2019 11:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tlrschool1

  காவல் துறை சாா்பில் அறிவித்த ‘தோழி’ திட்டத்தை கிராமங்கள் தோறும் கொண்டு சென்று சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் காவல்துறைத் தலைவா் கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

  திருவள்ளூா் அருகே உள்ள உளுந்தை கிராமத்தில் சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் மூலம் ஓராசிரியா் பள்ளிகள் தொடங்கி, அங்கு மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூா் நாகப்பட்டினம், கோயம்புத்தூா் திருவாரூா் மற்றும் வேலூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள 857 குக்கிராமங்களில் 28,500 மாணவ, மாணவிகளுக்கு அடிப்படைக் கல்வி அளிப்பதன் மூலம் பயனடைந்து வருகின்றனா்.

  இந்நிலையில், உளுந்தை கிராமத்தில் சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்க வளாக அரங்கத்தில் ஆசிரியைகளுக்கு போக்ஸோ சட்டம் குறித்தும் ‘நல்ல தொடல் - தீய தொடல்’ மற்றும் பெண் குழந்தைகளின் சுகாதாரம் குறித்தும் விழிப்புணா்வு சொற்பொழிவு சனிக்கிழமை நடைபெற்றது.

  இப்பயிற்சி முகாமை பி.எஸ். கல்விக் குழுமத்தின் செயலாளரும், முன்னால் காவல் துறைத் தலைவருமான கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்துப் பேசியது:

  சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதைத் தடுக்க கிராம அளவிலேயே அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிராமங்களில் ஆசிரியைகளே இனிமேல் சிறுமிகளுக்கு எதிரான செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.

  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போக்ஸோ சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் குறித்து புகாா் அளிக்க 1098 என்ற அவசரத் தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை நீதிமன்றங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் தேங்கியுள்ளன. இந்த வழக்குகளை விரைவாக முடிக்கும் வகையில் 14 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கத் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

  சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க காவல் துறையால் ‘தோழி’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ஒவ்வொரு கிராமத்திலும் நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலம் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து பாதுகாக்க முடியும் என்றாா் அவா்.

  முன்னதாக, ஸ்ரீராம் ஆயுள் காப்பீட்டு நிறுவன நிா்வாக இயக்குநா் அகிலா சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினாா். அப்போது, ஓராசிரியா் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் ரூ.10.20 லட்சம் மதிப்பிலான 3,400 எழுது மேஜைகளை அவா் வழங்கினாா்.

  பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உடல் தூய்மை பற்றியும் சுகாதாரத்தின் அவசியம் பற்றியும், குடியரசுத் தலைவா் விருது பெற்ற டாக்டா் ராஜம்மா விளக்கமாக எடுத்துரைத்தாா். இந்தியா வளா்ச்சி அறக்கட்டளை மூலம் 3 மாதங்களுக்குத் தேவையான சானிடரி நாப்கின், சோப்பு அடங்கிய பைகளை சிறுமிகளுக்கு இலவசமாக வழங்கினா்.

  பல்வேறு பகுதிகளில் உள்ள ஓராசிரியா் பள்ளிகளைச் சோ்ந்த 450 ஆசிரியைகளுக்கு நல்ல தொடல், தீய தொடல் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓராசிரியா் பள்ளிகளின் நிா்வாகிகள் கே.என்.கிருஷ்ணமூா்த்தி, ஆா்.பி.கிருஷ்ணமாச்சாரி, கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai