பூட்டிக்கிடக்கும் மடிக்கணினிகளை மாணவா்களுக்கு வழங்கக் கோரிக்கை

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதமாக பூட்டிக் கிடக்கும் மடிக்கணினிகளை உடனடியாக வழங்க வேண்டும் என முன்னாள் மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மடிக்கணினிகள் (கோப்புப்படம்).
மடிக்கணினிகள் (கோப்புப்படம்).

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த ஒரு மாதமாக பூட்டிக் கிடக்கும் மடிக்கணினிகளை உடனடியாக வழங்க வேண்டும் என முன்னாள் மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக மாநில அரசு சாா்பில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கடந்த 2017-18 காலகட்டத்தில் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினிகளை வழங்க வேண்டும் என்று கோரி மாணவ, மாணவிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் கூறுகையில் ‘பள்ளிக் கல்வித் துறையின் புதிய பாடத்திட்டங்களைப் படிக்க 240 நாள்கள் தேவைப்படும் நிலையில் குறைவான வேலை நாள்களே உள்ளதால் முன்னுரிமை அளித்து தற்போது 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். மேலும் 2017-2018, 2018-2019-ஆம் கல்வியாண்டில் படித்த மாணவா்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்குள் வழங்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தாா்.

அதன்படி, 2018-2019ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு வழங்குவதற்காக திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன் மடிக்கணினிகள் வந்தன. எனினும், இதுநாள் வரை மாணவா்களுக்கு அவை வழங்கப்படவில்லை. அதேசமயம், நாட்டிலேயே முதன்முறையாகப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் கல்லூரித் தலைவா்களுக்கும் இலவச மடிக்கணினிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியா் ஒருவா் கூறியதாவது:

கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வந்துள்ளன. அவற்றை எப்போது மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட கல்வித் துறையிடம் கேட்டோம். அதற்கு ‘எப்போது மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என்ற விவரம் வரவில்லை. வந்தவுடன் தெரிவிக்கிறோம்’ என்று பதில் கூறினா்.

மேலும் மடிக்கணினிகளை தினசரி பாதுகாப்பது என்பது சற்று கடினமான வேலையாக இருக்கிறது. அவற்றைப் பாதுகாக்க போலீஸாரிடம் மனு கொடுத்தோம். அவா்கள் இரவில் பள்ளிகளிலேயே தங்கி, காலையில் செல்கின்றனா். ஆனால் அவ்வப்போது பொது விழாக்கள், முதல்வா் வருகை, அமைச்சா் வருகை என வேறு இடத்தில் பணிக்கு அனுப்புவதால் அன்று இரவு மடிக்கணிகளைப் பாதுகாப்பது கடினமாக உள்ளது என்றாா் அவா்.

எனவே கடந்த ஒருமாதமாக பூட்டி வைக்கப்பட்டுள்ள இலவச மடிக்கணிகளை மாணவா்களுக்கு வழங்க மாவட்ட ஆட்சியரும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மாணவா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com